இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை நேற்று கைப்பற்றியது.
வெற்றிக்குப் பின் இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘மீண்டும் ஒரு முறை இங்கு தொடரை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. பொதுவாக உள்ளூர் டெஸ்ட், வெளியூர் டெஸ்ட் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு விளையாடுகிறோம். உலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் வெற்றிதான் எங்கள் இலக்கு. நம் திறமை மீது போதுமான நம்பிக்கை வைத்திருந்தால் எங்கு விளையாடினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. வெற்றியை தொடர வேண்டும். கடந்த 9 டெஸ்டுகளில் 6 முறை 600 ரன்களுக்கு மேல் குவித்து இருப்பது, எங்களது பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு ரன்வேட்கையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. புஜாராவும் ரஹானேவும் சிறப்பாக விளையாடினார்கள். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். இந்த வெற்றியில் அவரின் பங்கு அதிகம்’ என்றார்.
இலங்கை கேப்டன் சண்டிமால் கூறும்போது, ‘2வது இன்னிங்சில் எங்களது வீரர்கள் போராடிய விதம் திருப்தியாக இருக்கிறது. இதில் இருந்து சில சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணி எல்லா வகையிலும் எங்களை விட சிறப்பாக விளையாடியது’ என்றார்.