“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை
உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் போட்டிகளை தவிர்க்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் தொடங்கினால் அது கிரிக்கெட் ரசிகர்களை திருவிழா காலம்தான். ஏனென்றால் தொடர் டி20 போட்டிகள் உலக வீரர்கள் உட்பட இந்தியாவின் உள்ளூர் வீரர்கள் வரை இதில் பங்கேற்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் பேரம் தற்போதே தொடங்கிவிட்டது. அதற்கான தகவல்களும் அவ்வப்போது கசிந்து வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் என்பது சுமார் 50 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு 16 போட்டிகள் விளையாடிய பின்னர் அரையுறுதி, இறுதிப்போட்டி என மேலும் சில போட்டிகளில் விளையாடும். இந்தப் போட்டிகள் பேட்ஸ்மேன்களை உருவாக்கும் போட்டிகளாக அமையும். அதேநேரம் சிறந்த பந்துவீச்சளார்களின் பந்துகளைப் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கும் அளவிற்கு ஐபிஎல் பழக்கபடுத்திவிடும். அதுமட்டுமின்றி ஐபிஎல் விளையாடும் வீரர்கள் தொடர் போட்டிகளால் களைத்துவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு சில வாரங்கள் ஓய்வு தேவைப்படும். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதியில் முடிவடையவுள்ளது. அதேசமயம் மே மாதம் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஓய்வெடுக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக பும்ரா மற்றும் புவனேஷ்குமார் ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.