ஒரே போட்டியில் 5 சாதனைகளை முறியடித்த விராட் கோலி

ஒரே போட்டியில் 5 சாதனைகளை முறியடித்த விராட் கோலி
ஒரே போட்டியில் 5 சாதனைகளை முறியடித்த விராட் கோலி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் விராட் கோலி.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய 46வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை 73 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா. ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

சொந்த மண்ணில் அதிக சதம்

இப்போட்டியின் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி முறியடித்தார். சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.

46வது சதம்

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452-வது இன்னிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

இலங்கைக்கு எதிராக 10 சதங்கள்

இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்கள் அடித்ததன் மூலம், ஒரு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். அதன்படி, சச்சின் மற்றும் கோலி இருவரும் இலங்கைக்கு எதிராக தலா 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர். இந்த சதத்தின் மூலம் அந்த சாதனை பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.  இது அனைத்து வடிவ கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு அணிக்கு எதிராக, தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்களின் எண்ணிக்கை ஆகும்.

சொந்த மண்ணில் அதிக ரன்கள்

சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தென் ஆபிரிக்காவின் ஜாக் கலிஸை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் சச்சின் டெண்டுல்கர் 6,976 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5,521 ரன்களும், விராட் கோலி  5,265 ரன்களும், தென்ஆபிரிக்காவின் ஜாக் கலிஸ் 5186 ரன்களும் எடுத்துள்ளனர்.

அதிக ரன் பட்டியலில் 5வது இடம்

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார். முன்னதாக, ஐந்தாவது இடத்தில் 12,650 ரன்களுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே இருந்தார். அவரைதான் கோலி இப்போது முந்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடனும், குமார் சங்கக்காரா 14,234 ரன்களுடனும், ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடனும், சனத் ஜெயசூர்யா 13,430 ரன்களுடனும், விராட் கோலி 12,651 ரன்களுடனும் உள்ளனர்.

முன்னதாக, பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில், 1020 நாட்களுக்கு பிறகு தனது 71வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அதுமுதல் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, அதன்பின் நான்கு சதங்களை அடித்துள்ளார்.

கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 259 இன்னிங்ஸில் 12,754 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 64 அரை சதம் மற்றும் 46 சதங்கள் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com