ராணா, ரஸல் விளாசல் வீண்: விராத் சதத்தால் பெங்களூருக்கு 2 வது வெற்றி

ராணா, ரஸல் விளாசல் வீண்: விராத் சதத்தால் பெங்களூருக்கு 2 வது வெற்றி

ராணா, ரஸல் விளாசல் வீண்: விராத் சதத்தால் பெங்களூருக்கு 2 வது வெற்றி
Published on

கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களாக விராத் கோலி, பார்த்தீவ் படேல் களமிறங்கினர். பார்த்தீவ் 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அக்‌ஷ்தீப் நாத்தும் 13 ரன்னில் நடையை கட்டினார். 59 ரன்களுக்கு பெங்களூர் அணி 2 விக்கெட்களை இழந்தது. பின்னர், விராத் கோலியுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். மொயின் அலி வந்த வேகத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். விராத் 40 பந்திலும், மொயின் அலி 24 பந்திலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய மொயின் அலி 28 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 

விராத் கோலி, கடைசி ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். அதற்கடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 58 பந்தில் சதம் அடித்தார். ஸ்டோய்னிஸ் 8 பந்தில் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. 

     இதனையடுத்து, 214 ரன் என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் 1 ரன்னுடனும், சுனில் நரின் 18 ரன்னுடனும் மற்றும் சுப்மான் கில் 9 ரன்னுடனும், ராபின் உத்தப்பா 9 ரன்னுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 11.5 ஓவர்களில் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

5-வது விக்கெட்டுக்கு வந்த ரஸல், நிதிஷ் ராணாவுடன் இணைந்தார். இருவரும் அதிரடி காட்டி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை, மொயின் அலி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் ராணா ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரஸல். 4-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 5-வது பந்தில் ரன்-அவுட் ஆனார். கடைசி பந்தை நிதிஷ் ராணா சிக்சருக்கு தூக்கினாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களே எடுக்க முடிந்தது.

இதையடுத்து பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்னும் ரஸல் 25 பந்தில் 9 சிக்சர், 2 பவுண்டரியுடன் 65 ரன்னும் எடுத்தனர்.

இந்த தொடரில் பெங்களூரு அணி பெற்ற இரண்டாவது வெற்றி இது. சதம் விளாசிய விராத் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com