தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலி அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. மழைக்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, விராட் கோலி அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், பவுலர்களால் ஸ்விங் செய்ய முடியவில்லை என்று அம்பயர் மைக்கல் காக்கிடம் முறையிட்டார்.
கோலியின் நீண்ட நேர விவாததிற்கு பின்பும் காக்கிடம் இருந்து சாதகமான பதில் ஏதும் வரவில்லை. இதனால், கோபமடைந்த விராட் ஆத்திரத்துடன் பந்தை தூக்கி எறிந்துவிட்டு வேகமாக நடந்து சென்றார். கோலியின் இத்தகைய செயலிற்கு நடுவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஐசிசி விதிமுறைகளை மீதி செயல்பட்டதால் விராட் கோலிக்கு அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விராட் கோலி போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி மீது ஏகப்பட்ட குற்றசாட்டுகள் இருந்து வரும் நிலையில் இந்தச் செயல் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.