இன்று கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கேப்- டவுனில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசிப் போட்டி இன்று நடக்கிறது.
கேப்டவுனில் நடக்கும் இன்றைய போட்டியில், கடந்தப் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சேஹல் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் களமிறக்கப் படலாம். அக்ஷர் படேல் தென்னாப்பிரிக்கத் தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
அதே போல கடந்த 2 போட்டியில் சொதப்பிய ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித்துக்குப் பதிலாக, கே.எல்.ராகுல் இறங்கலாம். அடிவயிறு பிரச்னையால் அவதிப்பட்டு வந்த பும்ரா, இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இவர் அணிக்கு திரும்பினால் உனட்கட் நீக்கப்படலாம்.
தென்னாப்பிரிக்க அணி, கடந்த போட்டியை வென்றுள்ளதால் நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குத் தொடங்குகிறது.