முதல் டெஸ்டில் ஏமாற்றிய கோலி: விரக்தில் ரசிகர் தற்கொலை முயற்சி
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விராட் கோலி மோசமான ரன்களை எடுத்ததால், அவரின் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்கிஸில் விளையாடிய விராட் கோலி குறைவான ரன்களை எடுத்திருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கோலியின் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், விராட் தனது மனைவி அனுஷ்காவுடன் விடுமுறையைக் கழிப்பதற்காகவே தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அனுஷ்கா சர்மா மும்பை திரும்பினார்.
இதற்கிடையில், கோலி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் அவரின் ரசிகர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 65 வயதாகும் அவரின் பெயர் பாபுலால் பைரவ். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரட்லாம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். கோலியின் தீவிர ரசிகரான இவர், டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோலி மோசமாக ஆடியதால் விரக்தில் இவ்வாறு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவருக்கு தலை, கைகள் மற்றும் முகப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற போது, பாபுலால் மது அருந்திருந்தாரா? என்பது குறித்து மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.