கங்குலியை முந்தினார், தோனியை சமன் செய்தார்: கோலி சாதனை
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதை அடுத்து, கேப்டன் விராத் கோலி சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளும், ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி னர்.
75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹனுமா விகாரி 93 ரன்கள் சேர்த்தார். பின்னர், 419 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 100 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பும்ரா 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் சில சாதனைகளை படைத்திருக்கிறார் கோலி. வெளிநாட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்னும் சாதனையை கங்குலி படைத்திருந்தார். அவர் கேப்டனாக இருந்து 11 வெற்றிகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 12 போட்டிகளில் வெற்றி பெற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.
அதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையைத் தோனியுடன் பகிர்ந்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ளார் தோனி. 47 போட்டிகளிலேயே 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் கோலி. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் இருக்கிறார் ’தாதா’ கங்குலி.