கோலி, ரோகித் சர்மா அதிரடி ! தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தலா அரை சதங்களை எடுத்துள்ளனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அடித்ததால் இப்போது இந்திய அணி கிட்டத்தட்ட தன்னுடைய வெற்றியை நெருங்கி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றதையடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக் கிறது. இந்நிலையில் மூன்றாவது போட்டி, மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து தொடக்க வீரர்களாக குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய முகமது ஷமி, கடைசி பந்தில் முன்றோ (7 ரன்) விக்கெட்டை வீழ்த்தினார்.
அவர் எளிதாக கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மா பிடித் தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன், குப்திலுடன் இணைந்தார். 7-வது ஓவரின் முதல் பந்தை புவனேஷ்வர்குமார் வீசினார். குப்தில் அதை அடிக்க முயல, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கிடம் தஞ்சம் அடைந்தது, அந்த பந்து. அடுத்து ராஸ் டெய்லர் வந்தார். அவரும் வில்லியம்சனும் பொறுமையாக ஆடினார். 48 பந்தில் 28 ரன் எடுத்திருந்த வில்லியம்சன், சாஹல் பந்தை முன்னால் இறங்கி அடிக்க முயன்றார். ஆனால், அந்தரத்தில் பறந்த அந்த பந்தை பாய்ந்து சென்று பிடித்தார், ஹர்திக் பாண்ட்யா. அபாரமான இந்த கேட்சை வர்ணனையாளர்கள் புகழ்ந்து தள்ளினர்.
அடுத்து விக்கெட் கீப்பர் லாதம், டெய்லருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். டெய்லர் 71 பந்துகளிலும் லாதம் 62 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 178 ஆக இருந்தபோது, சாஹல் வீசிய பநதை சிக்சருக்கு தூக்கும் எண்ணத்துடன் அடித்தார் லாதம். பவுண்டரி அருகே நின்றிருந்த ராயுடு அதை கேட்ச் ஆக்கியதால் ஆட்டமிழந்தார். அவர் 51 ரன் எடுத்தார். அடுத்து வந்த நிக்கோலஸை(6 ரன்)யும் சன்ட்னரையும் (3 ரன்) ஹர்திக் பாண்ட்யா எளிதாக வீழ்த்தினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் சதத்தை நோக்கி நடை போட்டார் ராஸ் டெய்லர். ஆனால் அவர் 93 ரன் எடுத்திருந்த போது, ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார்.
ஆனால், நடுவரிடம் ரிவியூ கேட்டார், ராஸ் டெய்லர். அதில் அவர் அவுட் என்பது தெரிந்ததும், சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த சோகத்தில், நடையை கட்டினார். அடுத்து வந்த சோதியையும் ஷமி சாய்த்தார். பின்னர் 49 ஓவர்களில் 243 ரன்னுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் புவனேஷ்வர்குமார், சாஹல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 28 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மாவும், கோலியும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இப்போது ரோகித் சர்மா 62 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 57 ரன்களுடனும் களத்தில் உள்ளார். இந்தியா இப்போது 29 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.