கோலி, டிவில்லியர்ஸ் மிரட்டல்: பெங்களூருக்கு 4-வது வெற்றி!

கோலி, டிவில்லியர்ஸ் மிரட்டல்: பெங்களூருக்கு 4-வது வெற்றி!
கோலி, டிவில்லியர்ஸ் மிரட்டல்: பெங்களூருக்கு 4-வது வெற்றி!

விராத் கோலி, டிவில்லியர்ஸின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 45வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் ஆடியது. இந்த அணியில் நேபாளத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சானே, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூனியர் டாலா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலக்கிய அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் ஜேசன் ராயும் களமிறங்கினர். இவர்கள் விக்கெட்டை சேஹல் சாய்த்தார். ஷா 2 ரன்களும் ராய் 12 ரன்களும் எடுத்தனர். அடுத்த வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும்  ரிஷாப் பன்ட்டும் அதிரடியாக விளையாடினர். ஐயர், 32 ரன்களில் அவுட்டாக, பன்ட் பெங்களூரு பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். அவர் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 34 பந்தில் 61 ரன்கள் எடுத்து மொயின் அலி சுழலில் வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்து விஜயசங்கருடன் இணைந்தார் அபிஷேக் சர்மா. யாரும் எதிர்பார்க்காத வகையில் அசத்தினார் அபிஷேக் சர்மா. அவர், 19 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 21 ரன்கள் எடுத்தார். 

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்திவ் படேலும் மொயின் அலியும் களமிறங்கினர். இருவரும் முறையே, 6 மற்றும் ஒரு ரன்னில் வெளியேற, அடுத்த வந்த கேப்டன் விராத் கோலியும் டிவில்லியர்ஸும் அதிரடி காட்டினர். கோலி 40 பந்தில் 70 ரன்கள் எடுத்த நிலையில் மிஷ்ரா பந்தில் அவுட் ஆனார். டிவில்லியர்ஸ் அவுட் ஆகாமல் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அந்த அணி 19 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

11 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி. இதன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் அந்த அணி நீடிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி அணிக்கு இது 9-வது தோல்வி ஆகும்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com