டி20-போட்டியிலும் வெற்றி: ஆஸி.யை சமன் செய்தது இந்தியா!
இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொடரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.
கொழும்புவில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 26 பந்துகளில் அரைசதம் விளாசிய முனவீரா 53 ரன்கள் எடுத்தார். அவர் ஆடிய விதத்தை பார்த்தால் இலங்கை அணி, 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இலங்கையின் அஷான் பிரியன்ஜன் 41 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
171 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா 9 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 24 ரன்களிலும் வெளியேறினர். மணீஷ் பாண்டேவுடன் இணைந்து ரன்வேட்டை நடத்திய கேப்டன் விராத் கோலி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவருக்கு 17-வது அரை சதம். அவர் 82 ரன்களில் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். மனிஷ் பாண்டே, வெற்றிக்குரிய ரன்னை எடுத்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 36 பந்துகளில் 51 ரன் குவித்தார். அவர் 36 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டி) தோல்வியை சந்திக்காமல் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 2010-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இதே போன்று (9-0) வெற்றி கண்டிருந்தது.