2 வது டெஸ்ட்: விராத், மயங்க் அரை சதம்!

2 வது டெஸ்ட்: விராத், மயங்க் அரை சதம்!

2 வது டெஸ்ட்: விராத், மயங்க் அரை சதம்!
Published on

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. 

இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணியில் கே.எல்.ராகுலும் மயங்க் அகரவாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கே.எல்.ராகுல் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில், கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் புஜாரா, வந்த வேகத்திலேயே 6 ரன்களில் கார்ன்வல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கேப்டன் விராத் கோலி, மயங்க் அகர்வாலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினார். சிறப்பாக ஆடிய மயங்க் அரைசதம் அடித்தார். அவர் 55 ரன்கள் எடுத்திருந்தபோது ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். கடந்த டெஸ்ட்டில் சதம் அடித்த அவர், 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய விராத் கோலி, அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் எடுத்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் ஹாமில்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதையடுத்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும் ரிஷாப் பன்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com