இந்தி நடிகையை காதலிக்கிறேனா? கே.எல்.ராகுல் விளக்கம்!
கிரிக்கெட் வீரர்கள், இந்தி நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராத் கோலி உட்பட பல கிரிக் கெட் வீரர்கள், நடிகைகளையே திருமணம் செய்துள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய நடிகை எலி அவ்ராமை காதலித்து வரு வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகை நிதி அகர்வாலைக் காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
பெங்களூரைச் சேர்ந்த ராகுல், ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக ரன்களை விளாசி கவனிக்க வைத்தார். ஐதரா பாத்தில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்த நடிகை நிதி அகர்வாலும் கே.எல்.ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்த தாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் என்ற பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
நிதி அகர்வால், முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யாசாட்சி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்தக் காதல் பற்றி இருவரும் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த செய்தி பற்றி விளக்கம் அளித்துள்ளார் கே.எல்.ராகுல். ‘நிதி அகர்வாலை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். இருவரும் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நல்ல நண்பர்கள். ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் சந்தித்தோம். எங்களுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்தார்கள். நாங்கள் காதலர்கள் இல்லை. அப்படி காதலித்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் காதலியை இளவரசியைப் போல நடத்துவேன். மறைக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.