கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு - மும்பை அணியில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்

கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு - மும்பை அணியில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்
கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு - மும்பை அணியில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் முதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் காணுகிறது. அதே நேரத்தில் 3 போட்டியில் 2 வெற்றிகளை பெற்ற கொல்கத்தா அணி 3-வது வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் மும்பை அணியின் கையே ஓங்கியிருக்கிறது. 29 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள நிலையில், 22 போட்டிகளில் மும்பை அணி வெற்றி கண்டிருக்கியது. எஞ்சிய 7 போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

15-வது சீசனில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று சற்று பலமாகவே காட்சியளிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றிக்கனியை ருசித்தது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டது. 4 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி தற்போது 2-வது இடத்தில் வீற்றிருக்கிறது. கொல்கத்தா அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் பங்களிப்பு ஆச்சர்யமளிக்கும் வகையில் உள்ளது.

3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார் உமேஷ் யாதவ். அவருடன் அனுபவ வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சவுத்தி, பேட் கம்மின்ஸ் ஆகியோரும் கொல்கத்தா அணியில் உள்ளனர். தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என அதிரடி பட்டாளமாக உள்ளது.

அதேவேளையில், வீழ்ச்சியில் இருந்து எழுச்சி அடைவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கைவந்த கலை. நடந்து முடிந்த சீசன் பல அதற்கு சாட்சி. அதனால், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதை கொண்டு மும்பை அணியை எளிதில் எடை போட்டு விட முடியாது. இளம் நாயகன் இஷான் கிஷனின் அதிரடி தொடக்கம் மும்பை அணிக்கு பெரும்பலமாக இருக்கிறது. அந்த அணி விளையாடியுள்ள இரு போட்டிகளிலும் அரைசதம் விளாசியிருக்கிறார் இஷான் கிஷன். மும்பை அணியில் இடம்பெற்றுள்ள ஹைதராபாத்தை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மாவின் ஆட்டமும் திருப்திகரமாக இருக்கிறது. மும்பை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.

கொல்கத்தா அணி வீரர்கள்:

ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், சலாம், வருண் சக்ரவர்த்தி.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கெய்ரன் பொலார்ட், ப்ரூவீஸ், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், டைமல் மில்ஸ், பும்ரா, பாசில் தம்பி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com