'வைடு பால்' வீசினாரா பிரஷித் கிருஷ்ணா? - நடுவர் முடிவால் வெடித்த சர்ச்சை

'வைடு பால்' வீசினாரா பிரஷித் கிருஷ்ணா? - நடுவர் முடிவால் வெடித்த சர்ச்சை
'வைடு பால்' வீசினாரா பிரஷித் கிருஷ்ணா? - நடுவர் முடிவால் வெடித்த சர்ச்சை

நடுவரின் 'வைடு பால்' முடிவால் பிரஷித் கிருஷ்ணா மற்றும் சஞ்சு சாம்சன் அதிருப்தி அடைந்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சின்போது நடுவர் எடுத்த முடிவு ஒன்று சர்ச்சையை உருவாக்கி உள்ளது. 19-வது ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது அதை ராஜஸ்தான் அணியின் பிரஷித் கிருஷ்ணா வீசினார். அதில் முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் மட்டும் கொடுத்து அவர் 3-வது பந்தில் பெரிய ஷாட் ஏதும் அடித்துவிடக்கூடாது என்ற நோக்கில் வைடு பந்தைப் போல வீச முயற்சித்து, அதை ஸ்டம்புக்கு அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டுக்கு மேலேயே துல்லியமாக வீசினார். அதை எதிர்கொள்வதற்காக ரின்கு சிங் சற்று இடது புறமாக நகர்ந்து பந்தை அடிக்க முயற்சித்த போதிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அதை நடுவர், 'வைடு பால்' என அறிவித்தது ராஜஸ்தான் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை வரையறுக்கும் மேர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் விதிமுறைப்படி , ஸ்ட்ரைக்கர் எந்த இடத்தில் கிரீசில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அது ஓய்டா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும், பவுலர் ஓடி வரத்தொடங்கும் போது ஸ்ட்ரைக்கர் இடம் மாறியிருந்தால் அந்த இடம்தான் பேட்டர் நிலையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிலிருந்துதான் 'வைடு பால்' என்று தீர்மானிக்கப்படும்.  இவ்வாறிருக்க ரின்கு சிங் சற்று இடது புறமாக நகர்ந்து அடிக்க முயற்சித்த பந்தை அம்பயர் 'வைடு' என அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும், 4 மற்றும் 6 ஆகிய பந்துகளில் அதேபோன்ற பந்தை மீண்டும் பிரஷித் கிருஷ்ணா வீசிய போது மறுபடியும் அம்பயர் வைடு வழங்கியது, பிரஷித் கிருஷ்ணா மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சனை அதிருப்தியடைய வைத்தது. அதற்கிடையில் ரின்கு சிங் 1 பவுண்டரியும் நிதிஷ் ராணா 1 சிக்சரும் அடித்ததால் 19-வது ஓவரிலேயே போட்டியும் முடிந்தது. மொத்தத்தில் அந்த பரபரப்பான நேரத்தில் அம்பயரின் தவறான முடிவால்  கொல்கத்தா அணி வெற்றி பெற்றதாக ராஜஸ்தான் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடைசியாக ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்த கொல்கத்தா அணி, மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளது. மறுபக்கம், பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த ராஜஸ்தான், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல்: பழி தீர்த்தது கொல்கத்தா - 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி









Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com