12 பந்துகள், 5 விக்கெட்டுகள்: மும்பையை காலி செய்த ரசல்!
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமாக பந்துவீசி அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ரசல். ஆட்டத்தின் பதினெட்டு மற்றும் இருபதாவது ஓவரை மட்டுமே அவர் வீசி இருந்தார். அதன் மூலம் வெறும் பன்னிரெண்டு பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளையும் அவர் அள்ளியுள்ளார்.
இது மும்பை அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது. அதோடு கொல்கத்தா அணிக்கான சிறந்த பந்து வீச்சாகவும் பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிய அந்த 12 பந்துகளில் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை ரசல் கட்டுப்படுத்தியுள்ளார் என விமர்சகர்கள் சொல்கின்றனர்.
பொல்லார்ட், ஜென்சென், குர்ணால், பும்ரா, ராகுல் சாஹர் என மும்பை அணியின் ஐந்து பேட்ஸ்மேன்களை அவர் அவுட் செய்திருந்தார். இதில் பொல்லார்ட் மற்றும் குர்ணால் பவர் ஹிட்டர்கள். “நான் எப்போதுமே என்னை தயார்படுத்திக் கொள்வேன். இன்று ஆட்டத்தின் 18வது ஓவரில் தான் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. என்னிடம் அணி எதிர்பார்த்ததை கடைசி கட்டத்தில் செய்ய முடிந்தது. ஹர்திக், பொல்லார்ட், குர்ணால் மாதிரியான பேட்ஸ்மேன்களை எதிர்த்து கடைசி நேரத்தில் பந்து வீசுவது சவாலான காரியம்” என ரசல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு தெரிவித்துள்ளார்.