பெங்களூரை பந்தாடிய KKR! கிலியூட்டிய கில்-வெங்கடேஷ் ஐயர் காம்போ!வருண் அசத்தல்!மேட்ச் ரிவ்யூ

பெங்களூரை பந்தாடிய KKR! கிலியூட்டிய கில்-வெங்கடேஷ் ஐயர் காம்போ!வருண் அசத்தல்!மேட்ச் ரிவ்யூ

பெங்களூரை பந்தாடிய KKR! கிலியூட்டிய கில்-வெங்கடேஷ் ஐயர் காம்போ!வருண் அசத்தல்!மேட்ச் ரிவ்யூ

அபுதாபி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. 

டாஸ் வென்ற கோலி!

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணிக்காக பரத் மற்றும் வனிந்து ஹசரங்கா அறிமுக வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக விளையாடினார். 

ஏமாற்றிய கோலி!

தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினர். இருவர் மீதும் பலமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் கோலி, 5 ரன்களில் அவுட்டானார். 

படிக்கல் பவர் பிளே ஓவர் முடிவின் கடைசி பந்தில் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஆறு ஓவர்களில் 41 ரன்களை எடுத்திருந்தது பெங்களூர். 

கோலியை பிரசித் கிருஷ்ணாவும், படிக்கல்லை ஃபெர்கியூசன்னும் வெளியேற்றி இருந்தனர். 

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ரசல்!

அறிமுக வீரர் பரத் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரசல் வேகத்தில் ஆட்டத்தின் 9-வது ஓவரில் வெளியேறினார். அதே ஓவரில் டிவில்லியர்ஸும் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆட்டத்தில் அது திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து மேக்ஸ்வெல், ஹசரங்கா, சச்சின் பேபி மாதிரியான வீரர்களும் அவுட்டாகி வெளியேறினர். ஜேமிசன் ரன் அவுட்டானார். ஹர்ஷல் பட்டேல் மற்றும் சிராஜ் அவுட்டாகினர். 

மாயாஜாலம் காட்டிய வருண் சக்கரவர்த்தி!

வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் கைப்பற்றினார். அதோடு ஒரு ரன் அவுட்டும் செய்திருந்தார் அவர். மேக்ஸ்வெல், ஹசரங்கா, சச்சின் பேபி என மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தினார் அவர். 

92 ரன்களுக்கு ஆல் அவுட்!

பெங்களூர் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 92 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இன்னிங்ஸில் மொத்தம் 62 பந்துகளில் ரன் ஏதும் பெங்களூர் அணி எடுக்கவில்லை. 

கிலியூட்டிய கில் - வெங்கடேஷ் ஐயர் காம்போ! 

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை கொல்கத்தா விரட்டியது. அந்த அணிக்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என பெங்களூர் கேப்டன் கோலி அமைத்த கள வியூகங்கள் அனைத்தும் வீணாகின.

10 ஓவர்கள் முடிவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது கொல்கத்தா. கில் 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்து வெளியேறினார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். 

வெங்கடேஷ் ஐயர் 27 பந்துகளில் 41 ரன்களை எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். அதை ரசல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து ரசித்தார். 

அடி சறுக்கிய ஆர்சிபி!

இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி சீசனில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூர் அணிக்கு அமீரகத்தில் முதல் போட்டியே அடி சறுக்கியுள்ளது. மிக விரைவில் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com