நியூசி.க்கு தகுதி இருக்கு: கேப்டன் கோலி புகழாரம்!
இந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோலி 121 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
281 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியில், ராஸ் டெய்லரும், டாம் லாதமும் விரைவாக ரன்கள் சேர்த்தனர். லாதம் ஒருநாள் போட்டிகளில் தமது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். ராஸ் டெய்லர் 95 ரன்கள் எடுத்தார். அந்த அணி 49 ஓவர்களில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘ஆரம்பத்தில் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் இருந்தது. ஆனால், ராஸ் டெய்லரும் லாதமும் நிலைத்து நின்று ஆடினர். அவர்கள் பார்டனர்ஷிப்பில் இருநூறு ரன்கள் என்பது சாதரண விஷயமில்லை. அப்படி நிலைத்து நின்று ஆடி ரன்கள் குவித்த அவர்கள் வெற்றிபெற தகுதியானவர்களே. எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அவர்கள் தரவில்லை. நாங்கள், 275 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால், இன்னும் 30, 40 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும். பிட்ச்சின் தன்மை முதல் பாதியில் சரியாக அமையவில்லை. எங்கள் சுழல் பந்துவீச்சாளர்களை ராஸ், லாதம் இருவரும் சிறப்பாக எதிர்கொண்டார்கள். குறிப்பாக லாதம் மிரட்டினார். பந்துவீச்சில் போல்ட் நன்றாக செயல்பட்டார். எனது 200-வது போட்டியில் சதமடித்தது மகிழ்ச்சி’ என்றார்.