மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்?

மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்?

மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்?
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜ். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது பரபரப்பு புகார் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரியம், இதுகுறித்து மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த மாதம் 30 ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாகவும் மிதாலியுடனான பிரச்னை காரணமாக கடும் அதிருப்திக்குள்ளான வாரியம், அவர் பதவியை நீட்டிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரமேஷ் பவாரை 2021-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அதே நேரம் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று கிரிக்கெட் வீராங்கனைகள் எக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இரு கோஷ்டி இருப்பதும் கடும் அரசியல் நிலவுவதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்காக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் உட்பட சுமார் 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதோடு, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டனும் விண்ணப்பித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன். அவர் மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

கபில்தேவ் தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com