ஐபிஎல் 2020 : ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்ட பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள்
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) புறப்பட்டுச் சென்றன.
ஐபிஎல் 2020 தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் யிற்சியை தொடங்கிவிட்டன. இதைத்தொடர்ந்து யுஏஇ சென்று அங்கு பயிற்சியை மேற்கொள்ளவுள்ளன. இந்நிலையில் முதற்கட்டமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல் ஆகிய அணிகள் யுஇஏ சென்றுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விமானத்தில் துபாய் சென்ற வீடியோவை அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் கொரோனா பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் உபகரணங்களுடன் யுஏஇ சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஆகஸ்ட் 21ஆம் தேதி யுஏஇ செல்லவுள்ளதாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று நகரங்களில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தம் 53 நாட்கள் போட்டிகள் தொடரும். போட்டி நடைபெறும் முழு பட்டியலை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.