என்னாது, "சூச்சின் டென்டுல்கரா" ? - ட்ரம்ப்பை கலாய்க்கும் கிரிக்கெட் பிரபலங்கள் !
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார். வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வந்த ட்ரம்ப் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார்.
அப்போது பாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், கிரிக்கெட் குறித்தும் பேசினார். அதில் பாலிவுட்டில் வெளியாகும் படங்களை உலக மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களை இந்தியா கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். அப்போது சச்சின் டெண்டுல்கர் என்று உச்சரிப்பதற்கு பதிலாக "சூச்சின் டெண்டுல்கர்" என உச்சரித்தார். இப்போது ட்ரம்பின் உச்சரிப்பை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கேலியாகவும் கிண்டலாக பேசியுள்ளனர்.
இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டன் தொலைக்காட்சி வர்ணனையாளர் பியர்ஸ் மார்கனை டேக் செய்து "தயவு செய்து உங்களது சக நண்பருக்கு சாதனையாளர்களின் பெயர்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்" என கிண்டலடித்துள்ளார். இதேபோல ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் எப்படி உச்சரிப்பது எனக் கேள்வி எழுப்பி "சச், சுச், சாட்ச், சுட்ச், சூச்" என கலாய்த்துள்ளது.
ட்விட்டரில் படு ஆக்டிவாக செயல்படும் ஐஸ்லாந்து கிரிக்கெட் "சூ சின் டென் டூல் கா மற்றும் வீ ராத் கோ லீ ஆகியவை இந்தியாவில் இருக்கும் மிகவும் புகழ்வாய்ந்த சீன உணவு வகைகள். ட்ரம்புக்கு இவற்றையெல்லாம் சரியாக உச்சரிக்க தெரிந்து இருக்கிறது " என சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளது. இதில் உச்சக்கட்டமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் ட்விட்டரில் டேக் செய்து "எப்படி இருக்கிறீர்கள் சூச்சின்" என நக்கலடித்துள்ளார். ஆனால் இவற்றுக்கு எல்லாம் பதிலளிக்காமல் சச்சின் டெண்டுல்கர் மவுனமாக இருக்கிறார்.