கேரள வீராங்கனை விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க அறிவுறுத்தல்
தடகள வீராங்கனை பி.யு சித்ரா விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுமாறு இந்திய தடகள சம்மேளனத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளனத் தலைவர் அடில் சுமரிவாலாவிடம் பேசியுள்ள விஜய் கோயல், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு சித்ரா தகுதி பெற்றார். ஆனால் இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இலக்கை கடக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக இல்லை என இந்திய தடகள சங்கம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து சித்ரா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.