அந்த விக்கெட்டுக்கு டோனியின் பார்வைதான் காரணம்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி!
நான் விக்கெட் எடுக்க டோனியின் பார்வை சொன்ன ரகசியம் தான் காரணம் என கேதர் ஜாதவ் கூறினார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவும் பங்களாதேஷும் மோதின. இதில் தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் கூட்டணி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி தவித்தது. அப்போது திடீரென பந்துவீச அழைக்கப்பட்டார் கேதர் ஜாதவ். இவர் முஷிபிகுர் ரஹிம், தமிம் இக்பால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி
அசத்தினார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த விக்கெட்டுகளை எடுத்தது பற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, ‘நான் அதிகமாக பவுலிங் பிராக்டிஸ் செய்ததில்லை. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். டோனி மீது மரியாதைவைத்திருக்கிறேன். இந்திய அணிக்கு நான் தேர்வானதுமே அவருடன் தான் அதிக நாட்களை செலவழித்திருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான பல அனுபவங்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் இருந்து பாடம் படித்திருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் என்னை பந்து வீசச் சொன்னபோது,
நான் டோனியின் கண்களைத்தான் பார்த்தேன். அவரின் கண்கள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து பந்துவீசினேன். அது ஒர்க் அவுட் ஆனது. இதற்கு முன்பும் நான் பந்து வீசி விக்கெட் எடுத்திருக்கிறேன் என்றாலும் இந்த ஆட்டத்தில் விக்கெட் எடுத்தது எனக்கு ஸ்பெஷல். இப்போது எனது பந்து வீச்சின் மீது நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது’ என்றார்.