10 வருடத்துக்குப் பின் கராச்சியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியின் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சில இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்தன. பின்னர் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணி ஒரு டி20 போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் ஒரு டி20 தொடரையும் கராச்சியில் விளையாடியது.
இந்நிலையில் இலங்கை அணி, பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்ட நிலையில் திரிமன்னே தலைமையிலான இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது.
இங்கு இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது. 10 ஆண்டு இடைவெளியில் அங்கு நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டி இது.
வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள், சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்புப்படையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் அளவிலான பாதுகாப்பு இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது