தோனி எப்போது ஓய்வு பெற்றாலும்... - மனம் திறந்த கபில்தேவ்
தோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என கபில்தேவ் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு 1983ம் ஆண்டு நிறைவேறியது. அந்த வருடம் தான் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று சாதித்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கபில்தேவ். உலகக்கோப்பை வென்ற நிகழ்வை மையமாக வைத்து கபில்தேவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாக்கப்பட்டுள்ளது. இது தமிழிலும் வெளியாகவுள்ளது.
83 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவாக நடித்துள்ளார். தமிழ் நடிகர் ஜீவா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கபில் தேவ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் பேசிய கபில் தேவ் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசினார்.
அதில், ''பல ஆண்டுகளாக தோனி நாட்டிற்காக சிறப்பான விளையாட்டை கொடுத்துள்ளார். அவர் நிச்சயம் ஓய்வு பெறுவார். அது விரைவிலோ அல்லது தாமதமாகவோ நடக்கும். அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார் என எனக்கு தெரியாது. ஆனால் தோனி எப்போது ஓய்வுப் பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு'' என தெரிவித்துள்ளார்.