அதிக இரட்டை சதம்! மெக்கல்லம் சாதனையை முறியடித்த வில்லியம்சன்! கோலி மட்டுமே பாக்கி!

அதிக இரட்டை சதம்! மெக்கல்லம் சாதனையை முறியடித்த வில்லியம்சன்! கோலி மட்டுமே பாக்கி!
அதிக இரட்டை சதம்! மெக்கல்லம் சாதனையை முறியடித்த வில்லியம்சன்! கோலி மட்டுமே பாக்கி!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 5ஆவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்.

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகான கேப்டன் பதவி, பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாகவே கேன் வில்லியம்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அனுபவமுள்ள வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேன் வில்லியம்சனே கேப்டனாக நீடிப்பார் என்று தலைமை பயிற்சியாளர் தெரிவித்தார்.

கேன் வில்லியம்சனின் கேப்டன்சி மாற்றப்பட்டது குறித்து பேசியிருந்த நியூசிலாந்தின் தலைமைபயிற்சியாளர் கேரி ஸ்டீட், “பணி சுமை காரணமாக மட்டுமே கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அணிக்காக தேவையானவற்றை செய்துகாட்டியுள்ளார். இதன் பிறகு ஒரு பேட்டராக வில்லியம்சனின் திறமையான ஆட்டத்தை நாம் பார்க்கவிருக்கிறோம்” தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்த பாகிஸ்தான் தொடரிலிருந்து கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார் டிம் சவுத்தி. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

3 வருடங்களுக்கு பிறகு திரும்பிய முன்னாள் கேப்டன் - 8ஆவது சதமடித்த தற்போதைய கேப்டன்!

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். 3 வருடங்களிற்கு பிறகு அணிக்கு திரும்பிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கைக்கோர்த்த இந்த கூட்டணி 196 ரன்கள் பார்டனர்ஷிப் போட்டது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 8ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் 86 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய லோயர் ஆர்டர் பேட்டர் ஆஹா சல்மான் இறுதி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவருடைய பங்குக்கு அவரும் 100 அடித்து அசத்த பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 438ஐ எட்டியது. இறுதியில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 438 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானுக்கு எதிராக 2ஆவது இரட்டை சதமடித்த வில்லியம்சன்!

முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ஓபனர்கள் லாதம் மற்றும் கான்வே இருவரும் அரைசதமடித்து அசத்த, அணியின் ஸ்கோர் 200ஐ நோக்கி உயர்ந்துகொண்டிருந்தது. முதல் விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் நீண்ட நேரம் போராடினர். அந்த போராட்டத்தின் பலனாக நியூசிலாந்து அணி 183 ரன்கள் எடுத்திருந்த போது கான்வேவை 92 ரன்களில் அவுட்டாக்கி இந்த கூட்டணியை பிரித்தனர்.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாதம் அற்புதமான சதத்தை பதிவுசெய்து, அப்ரார் அக்மதுவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த பேட்டர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் நிலைத்து நிற்காமல் வெளியேற, ஒருபுறம் தூண் போல் நிலைத்து விளையாடினார் கேன் வில்லியம்சன்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்த, அணியின் ஸ்கோர் 400ஐ கடந்தது. 436ஆக்கு 6 விக்கெட்டுகள் ஆன போது கைக்கோர்த்த இஷ் சோதி ஒருபுறம் நிலைத்து நிற்க 200 ரன்களுக்கான பாதையில் பயணித்தார் வில்லியம்சன், வில்லியம்சன் 195 ரன்கள் இருந்த போது இஷ் சோதி 65 ரன்களுக்கு வெளியேற, அடுத்தடுத்து வந்த 2 பேட்டர்களும் அவுட்டாகி வெளியேற 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. வில்லியம்சன் இரட்டை சதம் வருமா வராதா என்ற நிலை ஏற்பட்டபோது, 8 பந்துகளை சமாளித்த அஜாஸ் பட்டேல் வில்லியம்சன் 200 அடிக்க துணைபுரிந்தார். வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன்னுடைய 2ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார், மேலும் ஒட்டுமொத்தமாக 5ஆவது முறையாக பதிவு செய்து அசத்தினார்.

205 ரன்களை விட்டுக்கொடுத்த அப்ரார் அகமது!

பாகிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, சிறப்பாக பந்துவீசினாலும் தன்னுடைய 3ஆவது போட்டியிலும் 200 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அறிமுகப்போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசியிருந்தாலும் 235 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு மோசமான சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அப்ரார் அகமது!

இங்கிலாந்துக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அப்ரார், அறிமுக இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய 3ஆவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் இந்த சாதனையை படைத்த 4ஆவது வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.

முதல் 5 இன்னிங்ஸ்களில் அதிக பந்துகளை வீசிய 3ஆவது பவுலர் என்ற மோசமான சாதனை!

முதல் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அப்ரார் அகமது, 5 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 993 பந்துகளை வீசியுள்ளார். இந்த பட்டியலில் இவர் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ப்ராங்க் வார்டு 1268 பந்துகள், டான் ப்ளாக்கி 1260 பந்துகள் இருவருக்கும் அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

5 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள்!

தன்னுடைய முதல் 5 இன்னிங்ஸ்களில் சிறப்பான பவுலிங்க் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் அப்ரார், 22 விக்கெட்டுகளை கைப்பற்றி, முதல் ஐந்து இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

பிராட்மேன் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!

பாகிஸ்தானுக்கு எதிரான கிறிஸ்சர்ச்சில் 238 ரன்கள் அடித்த பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்றைய போட்டியில் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவர் இன்று அடித்த இரட்டை சதம் முக்கியமான சில மைல்கற்களை எட்டியுள்ளது. இத்துடன் வில்லியம்சன் அடித்த இரட்டை சதங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து அணிக்காக அதிக இரட்டை சதங்களை அடித்தவர் என்ற இடத்தை அடைந்துள்ளார். அவர் 4 இரட்டை சதங்களுடன் இருந்த பிரண்டன் மெக்கல்லம்மை பின்னுக்கு தள்ளியுள்ளார். மொத்தமாக பார்த்தால் அவருக்கு முன்பாக 7 இரட்டை சதங்களுடன் விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com