Jang Kun Lee
Jang Kun LeePatna Pirates

PATNA PIRATES | இழந்த பெருமையை மீட்டெடுக்குமா பாட்னா பைரேட்ஸ்..?

எட்டு ஆண்டுகளில் வாழ்க்கையும் ஒரு பெரிய எட்டு போட்டுவிட்டு வந்துவிட்டது பாட்னா பைரேட்ஸ் அணிக்கு.
Published on

தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் சமீபத்திய படங்களுக்கு என்ன ஒரு வரி விமர்சனமோ அதுதான் பாட்னா பைரேட்ஸின் பி.கே.எல் பயணம் பற்றிய விமர்சனமும். 'பர்ஸ்ட் ஹாஃப் செம்ம. செகண்ட் ஹாஃப் நல்லாயில்ல'. பி.கே.எல்லின் முதல் ஐந்து சீசன்களில் தொடர்ச்சியாக ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்ற அணி, தொடர்ந்து மூன்று முறை சாம்பியனாகி அசைக்கவே முடியாத காட்டு யானையாக வலம் வந்த அணி, பர்தீப் நர்வால், ரோஹித், அமித் ஹூடா என ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார்களை உருவாக்கிய அணி. இந்த பெருமையெல்லாம் முதல் ஐந்து சீசன்கள் மட்டும்தான். அதன்பின் ப்ளே ஆஃப் தகுதி பெறுவதே குதிரைக்கொம்பாகிவிட்டது.

கடந்த முறை ப்ளே ஆஃப் சென்றார்கள்தான். ஆனால் அரையிறுதியில் அசுர பலம்கொண்ட புனேரி பல்தானோடு போட்டிபோட்டு அவர்களால் வெல்ல முடியவில்லை. இந்த ஏலத்திற்கு முன்னதாக மொத்தமாய் டிபென்ஸ் டிபார்ட்மென்ட் கூடாரத்தை காலி செய்துவிட்டார்கள். பிரதான ரைடரான சச்சினை ர்லீஸ் செய்து ஆர்.டி.எம்மில் எடுக்க நினைத்த திட்டத்தையும் தமிழ் தலைவாஸ் அணி சுபம் போட்டு முடித்துவைத்துவிட்டது. டிபென்டர் ஷுபம் ஷிண்டேவை 70லட்சத்திற்கு வாங்கியதுதான் இவர்கள் ஏலத்தில் செய்த காஸ்ட்லி பர்சேஸ். கூடவே கொரிய வீரர் ஜாங் லீயையும் ஹரியானா அணியில் வளர்ந்த மீட்டுவையும் எடுத்தார்கள். குர்தீப்பை 59 லட்சத்திற்கும் தீபக் சிங்கை 50 லட்சத்திற்கும் அணியில் சேர்த்துக்கொண்டார்கள். இவர்கள் இருவரும் ஆல்ரவுண்டர் பிரிவின்கீழ் வந்தாலும் பி.கே.எல்லில் ரெய்ட் போனதே கிடையாது. அவ்வளவுதான். வேறெந்த சீனியர் ரைடர்களையும் எடுக்க எத்தனிப்பு கூட இல்லை.

என்னத் திட்டத்தோடு ஏலத்திற்கு வந்தார்கள்? முதலில் அவர்களுக்கு திட்டமென ஒன்று இருந்ததா என எதுவும் அன்று ஏலம் பார்த்தவர்களுக்கு புரியவில்லை. ஒருவேளை நிஜமாகவே அவர்களிடம் ஒரு பயங்கரமான ப்ளூபிரின்ட் இருந்து அதன்படி பாட்னா இந்த சீசனில் நன்றாக விளையாடினால் அது பி.கே.எல் இதுவரை பார்த்திடாத வெற்றித் தந்திரம்.

பலம்

டிபென்ஸ் ஏரியாவில் ஓரளவிற்கு பலம் வாய்ந்த அணியாகவே பாட்னா இருக்கிறது. பெங்கால் வாரியர்ஸுக்கு கடந்த இரண்டு சீசன்களாக வலதுபக்க எல்லைச்சாமியாக இருந்த ஷுபம் ஷிண்டே அணிக்கு நல்ல இன்வெஸ்ட்மென்ட். தன் முதல் சீசனிலேயே 66 டிபென்ஸ் பாயின்ட்கள் எடுத்த அங்கித் ஜக்லானை தக்க வைத்திருப்பதால் இரு கார்னர் ஏரியாக்கள் பற்றி பெரிதாய் கவலையில்லை. கவர் டிபென்டரான தீபக் சிங்கும் கடந்த சீசனில் நன்றாகவே ஆடினார். மற்றொரு கவர் டிபென்டரான குர்தீப் இதுவரை பி.கே.எல்லில் தனித்துத் தெரியும்படி ஆடியதில்லை. ஆனாலும் இந்தமுறை அவர் வாங்கப்பட்ட தொகைக்குன் நியாயம் சேர்க்க மெனக்கெடுவார் என்பதால் பிரச்னையில்லை.

பலவீனம்

சுதாகர், மீட்டு ஷர்மா, சந்தீப் குமார் என திறமைவாய்ந்த இளம் ரெய்டர்கள் அணியில் இருக்கிறார்கள்தான். ஆனால் சுதாகருக்கும் சந்தீப்புக்கும் இது இரண்டாவது சீசன் தான். மீட்டு மூன்று சீசன்கள் ஆடியிருக்கிறார் என்றாலும் அவர் பெரும்பாலும் மூன்றாவது ரெய்டராகவே களமிறங்கி இருக்கிறார். கொரிய வீரர் ஜாங் லீ முதல் சீசனிலேயே ஆடத் தொடங்கியவர்தான். சொல்லப்போனால் வெளிநாட்டு வீரர்களில் அதிக ரெய்ட் பாயின்ட் வைத்திருப்பது ஜாங் லீதான். 471 பாயின்ட்கள். ஆனால் அவருமே கடந்த மூன்று சீசன்களாக பி.கே.எல் ஆடவில்லை. எனவே யார் முதன்மை ரெய்டராக பொறுப்பேற்று வழிநடத்திப்போவார்கள் என்கிற கேள்வி ரசிகர்களை குடைந்தபடி இருக்கிறது.

கவனிப்படவேண்டிய வீரர்

சுதாகர் - நம் திருச்சிக்காரத் தம்பி. பி.கே.எல்லில் விளையாடும்வரை அதை டிவியில்கூட பார்க்கப்போவதில்லை என வைராக்கியமாக உழைத்து சாதித்துக்காட்டியவர். 2022 யுவா கபடி சீரிஸின் தொடர் நாயகன் இவர்தான். 320 ரெய்ட் பாயின்ட்கள். உடனே பி.கே.எல் அணி நிர்வாகங்கள் இவரை சொந்தமாக்க போட்டி போட வென்றது பாட்னா பைரேட்ஸ் அணி. முதல் சீசனிலேயே 105 பாயின்ட்கள். தன் துடிப்பான ஆட்டத்தின் மூலம் எனர்ஜியை நமக்குள்ளும் கடத்தும் இந்த திறமைசாலிதான் இந்த சீசனில் பாட்னா பைரேட்ஸின் ரெய்டிங் முகமாக இருக்கமுடியும். இருக்கவேண்டும்.

ப்ளேயிங் செவன்

டிபென்ஸில் எல்லா பொசிஷன்களுக்கும் ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருந்தாலும் லட்சங்களைக் கொட்டி வாங்கப்பட்டிருக்கும் வீரர்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்.

சுதாகர் (ரைடர்), மீட்டு ஷர்மா (ரைடர்), ஜாங் லீ (ரைடர்), குர்தீப் சங்வான் (லெப்ட் கவர்), தீபக் சிங் (ரைட் கவர்), அங்கித் ஜக்லான் (லெப்ட் கார்னர்), ஷுபம் ஷிண்டே (கேப்டன் - ரைட் கார்னர்).

இளம் வீரர்கள் மேல் நம்பிக்கை வைத்தே மூன்றாவது சீசனில் களமிறங்கியது பாட்னா பைரேட்ஸ். அந்த நம்பிக்கை அவர்களுக்கு பரிசாகக் கொடுத்தது பி.கே.எல்லின் மகுடத்தை. இந்த இடைபட்ட எட்டு ஆண்டுகளில் வாழ்க்கையும் ஒரு பெரிய எட்டு போட்டுவிட்டு வந்துவிட்டது அவர்களுக்கு. திரும்பவும் முதலிலிருந்து கணக்கைத் தொடங்குகிறார்கள் அவர்கள். வெற்றியும் எட்டுமா எனக் காத்திருந்து பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com