2024 புரோ கபடி லீக் | புனேரி பல்தான் அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?
'என்ன வாங்குற அடியையெல்லாம் எண்ணுற?
என வில்லன் கேட்டவுடன்,
'ஆமா திருப்பிக் கொடுக்கணும்ல'
என ரஜினி சொன்னவுடன் தியேட்டர் அதிருமே, அந்த பன்ச் பி.கே.எல்லில் பொருந்துவது புனே அணிக்குத்தான்.
முதல் இரண்டு சீசன்களில் தொட்டதெல்லாம் தோல்விதான். அந்த காலகட்டத்தில் ஆடிய 28 போட்டிகளில் நான்கில் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது. புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து கடைசி இடம். ஆனால் அதன்பின் நடந்தது 'பராசக்தி ஹீரோடா...' லெவல் எழுச்சி. அடுத்த மூன்றாண்டுகள் தொடர்ந்து ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றார்கள். அதன்பின் சில சீசன்கள் க்ளைமேக்ஸிற்கு முன் ஹீரோவுக்கு நிகழும் அதே சறுக்கல். கடந்த இரண்டு சீசன்களாக சிக்கும் அணிகளை எல்லாம் புரட்டியெடுக்கிறார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஆடிய 48 போட்டிகளில் ஒன்பதில் மட்டுமே தோல்வி. அதுவும் போன சீசனில் மட்டும் 19 வெற்றிகள். ஒரே சீசனில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்கிற புது ரெக்கார்டையும் படைத்தார்கள்.
போன சீசனின் சாம்பியன் என்பதால் எதிர்பார்த்தபடியே முக்கால்வாசி வீரர்களை அப்படியே ரீட்டெயின் செய்துவிட்டார்கள். ரிலீஸ் செய்த வீரர்களில் பெரிய கை இரானிய சூப்பர்ஸ்டார் ஷாத்லூ ஷியானே தான். பெரிய விலை கொடுத்து எடுத்ததால் ஏலத்தில் விட்டுவிட்டு ஆர்.டி.எம்மில் எடுக்க முயன்றார்கள். ஆனால் அதில் தோல்வியே. எனவே லெப்ட் கார்னரை சரிகட்ட முன்னாள் பெங்களூரு டிபென்டர் அமனை தூக்கி வந்தார்கள். ஏற்கனவே அவெஞ்சர்ஸ் போல மிரட்டும் ரெய்டிங் யூனிட்டிற்கு மேலும் பலம் சேர்க்க நம்மூர்க்கார கில்லி அஜித் குமாரையும் 66 லட்சத்திற்கு வாங்கினார்கள். ஏற்கனவே சாம்பியன் டீம், இப்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறார்கள் என்றால் இந்த முறையும் இவர்கள்தான் சாம்பியனா?
பலம் :
ஸ்டார் வேல்யூக்காக ஒவ்வொரு வுட்டிலிருந்தும் சூப்பர்ஸ்டார்களை எடுத்துப்போட்டு தயாரிக்கும் பேன் இந்தியா படம் போல இருக்கிறது புனேரி பல்தானின் ரெய்டிங் யூனிட். ஒருபக்கம் குழந்தை முகத்தோடு எதிரணி ஏரியாவிற்குள் சென்று டச் பாயின்ட்கள் அள்ளி வரும் மோஹித் கோயத். இன்னொருபக்கம் சாந்தசொரூபியாய் நின்று சாதிக்கும் பங்கஜ் மோஹிதே, மறுபக்கம் சல்சல்லென பறக்கும் ஆகாஷ் ஷிண்டே, இவர்கள் போதாதென ரெய்ட், டிபென்ஸ் இரண்டிலும் கலக்கும் சூப்பர்ஸ்டார் அஸ்லம் இனம்தார். இதற்கே எதிரணிகளுக்கு கண்ணைக் கட்டியது கடந்த முறை. இந்த முறை அஜித்தை வேறு எடுத்திருக்கிறார்கள். ஆதித்யா ஷிண்டே, நிதின் என பேக்கப்களுக்கும் பஞ்சமில்லை.
ரெய்ட் டிபார்ட்மென்ட் மட்டுமல்ல, டிபென்ஸ் ஏரியாவிலும் கடந்தமுறை கலக்கியவர்களை தக்க வைத்திருக்கிறார்கள். சங்கேத் சாவந்த், அபினேஷ் நடராஜன், கெளரவ் கத்ரி ஆகிய மூவரும் அப்படியே ப்ளேயிங் செவனுக்குள் வந்துவிடுவார்கள். ஒரே ஒரு வீரர் மட்டுமே புதிதாக இந்த செட்டப்பிற்குள் வருகிறார் என்பதால் எந்தவகையிலும் டிஸ்டர்ப் ஆயிடாத இந்த கோர் டீம் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
கபடி வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் பி.சி ரமேஷ்தான் அணியின் கோச். அவருக்கு புனே அணியில் கோச்சாக இது மூன்றாவது ஆண்டு. மேலே சொன்ன வீரர்கள் அனைவருமே இவரின் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள்தான். சீசன் ஏழில் பெங்கால் வாரியர்ஸை கோப்பை வெல்ல வைத்தவர். கடந்த சீசனில் இந்த அணியை. முத்தாய்ப்பான மூன்றாவது முறைக்காக கங்கணம் கட்டிக் களமிறங்குகிறார். அவரின் அனுபவம் அணிக்கு கண்டிப்பாய் கைகொடுக்கும்.
பலவீனம் :
அணியில் பட்டவர்த்தனமாய் தெரியும் அந்த வீக்னெஸ் ஏழாவது இடத்தில்தான். லெப்ட் கார்னரில் ஷாத்லூ கோலோச்சிய இடம். போன சீசனில் மட்டும் 99 புள்ளிகளை அணிக்கு வாரிக்கொடுத்த அந்த கார்னரில் இந்த முறை களமிறங்கப்போவது அமன். அவரின் பி.கே.எல் அனுபவமும் கம்மி எல்லாம் இல்லை, ஆனால் ஷாத்லூ போன்ற சூப்பர்ஸ்டாரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதில்லையே. அந்த அழுத்தமும் கடந்த சீசனின் மோசமான பெர்ஃபாமன்ஸ் குறித்த நினைவுகளும் அவர் மூளைக்குள் நிச்சயம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை சமாளிப்பதில்தான் இருக்கிறது அவரின் வெற்றியும் அணியின் வெற்றியும்.
கவனிக்கப்பட வேண்டிய வீரர் :
துள்ளிப்பாயும் சிறுத்தை அஜித்குமார் தான். தமிழ் தலைவாஸுக்காக முதல் சீசனில் களமிறங்கியபோதே சீனியர் வீரர்களை எல்லாம் ஓரங்கட்டி பாயின்ட்களைக் குவித்தார். அதன்பின் மும்பை, ஜெய்ப்பூர் அணிகளிலும் அஜித் ராஜ்ஜியமே. போன சீசனில் மட்டுமே கொஞ்சமாய் பின் தங்கினார். இழந்த வேகத்தை மீட்டெடுக்கும் முனைப்போடு இந்த முறை களம் காண்கிறார். புனேரி பல்தான் இளம் வீரர்களை புடம்போட்டு வளர்க்கும் பட்டறை என்பதால் நிச்சயம் ஒளிர்வார்.
ப்ளேயிங் செவன் :
ஷாத்லூவின் இடத்தை எப்பாடுபட்டாவது நிரப்பிவிட வேண்டுமென அமன், மோகித், வைபவ் காம்ப்ளே, முகமது அமான், சவுரவ் என லெப்ட் கார்னருக்கு மட்டும் ஐந்து ஆப்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களுள் அமனுக்கே அனுபவம் அதிகமென்பதால் தொடக்க ஆட்டங்களில் அவர் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம்.
அஸ்லம் இனம்தார் (கேப்டன் - ரெய்டர்), மோஹித் கோயத் (ரெய்டர்), அஜித் குமார் (ரெய்டர்), சங்கேத் சாவந்த் (லெப்ட் கவர்), அபினேஷ் நடராஜன் (ரைட் கவர்), அமன் (லெப்ட் கார்னர்), கெளரவ் கத்ரி (ரைட் கார்னர்).
கோப்பை வென்ற அதே அணி, எக்கச்சக்க பேக்கப்கள் என நிச்சயம் ப்ளே ஆஃப்பிற்குள் சென்றுவிடும் அணியாகவே களமிறங்குகிறது புனேரி பல்தான். இவர்களுக்கு பி.கே.எல் தொடரே அதன்பின்னர்தான் தொடங்குகிறது.
இங்கே ரெய்டரும் டேக்கிள் புள்ளிகள் எடுப்பார். டிபென்டரும் ரெய்ட் போவார், போன முறை எதிரணிகளால் இவர்களை உடைக்கவே முடியாததற்கு இந்த வியூகம்தான் முக்கியக் காரணம். அதே வியூகம் இந்தமுறையும் கைகொடுக்குமா பார்க்கலாம்.