சிபாரிசு இருந்தால் தான் பத்ம விருதா..? ஜூவாலா கட்டா
சிபாரிசுக் கடிதங்கள் இருந்தால் தான் பத்ம விருதுகளுக்கு பெயர்கள் தேர்வு செய்யப்படுமா என்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் அவர், நாட்டின் பெருமைமிகு விருதுக்கு தேர்வாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என்கிற கோட்பாடு தனக்கு வியப்பை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், அதுதான் நடைமுறை என்பதால், தானும் அவ்வாறே செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டிற்காக 15 வருடங்களுக்கு மேல் விளையாடி வரும் தான், பல பெருமைமிகு விருதுகளை வென்று தந்திருப்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இருப்பினும், விருதுக்கு தகுதி இருப்பதற்கான சிபாரிசுக் கடிதத்தை பெற்று அனுப்பினால்தான் விருது கிடைக்குமா என்று ஜூவாலா கட்டா வேதனையுடன் கூறியிருக்கிறார்.
பேட்மிண்டனில் முன்னணி வீராங்கனையாகத் திகழும் ஜூவாலா கட்டா காமன்வெல்த் போட்டியில் இரண்டு பதக்கங்களையும், உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு முறை பட்டமும் வென்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.