’ஐபிஎல் தந்த நம்பிக்கையால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் சொன்னார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர், ஜோஸ் பட்லர் கூறும்போது, ‘ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது (ராஜஸ்தான் அணி) எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. இந்தியாவில் அவ்வளவு ரசிகர் கூட்டத்துக்கு முன், அழுத்தத்தில் ஆடியது சிறந்த நம்பிக்கையை அளித்தது. பந்து என்ன வண்ணத்தில் இருக்கிறது என்பது பற்றி கவலையில்லை. சிறப்பான ஆட்டம் மட்டுமே என் நோக்கமாக இருந்தது. டி20 போட்டிகளில் நீங்கள் அவுட்டானால், இன்னொரு போட்டி விரைவாக வந்துவிடும். அதில் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அப்படியல்ல. ஒரு போட்டியில் அவுட் ஆகிவிட்டால், அடுத்தப் போட்டிக்கு நீண்ட நாட்களாகக் காத்திருக்க வேண்டும். அதனால் அவுட் ஆகாமல் இருந்து ரன்களை குவிக்க நினைத்தேன். அது போன்றே செயல்பட்டேன்’ என்றார்.