சரவெடியாய் வெடித்த ஜோஸ் பட்லர் - முந்தைய சாதனைகளை முறியடித்து 3-வது சதம் விளாசல்

சரவெடியாய் வெடித்த ஜோஸ் பட்லர் - முந்தைய சாதனைகளை முறியடித்து 3-வது சதம் விளாசல்
சரவெடியாய் வெடித்த ஜோஸ் பட்லர் - முந்தைய சாதனைகளை முறியடித்து 3-வது சதம் விளாசல்

மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங்கில் சரவெடியாக வெடித்து ரன் மழை பொழிந்து, ராஜஸ்தான் அணி 223 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34 -வது லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இவர்கள் கூட்டணி ஆரம்பம் முதலே டெல்லி அணி பவுலர்களுக்கு டஃப் கொடுத்தனர்.

வலுவான கூட்டணி அமைத்த ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக அடித்து நொறுக்கினர். இந்த கூட்டணியை வீழ்த்த முயன்றும் டெல்லி அணி பவுலர்களால் முடியாமல் போனது. கடைசியாக இந்த கூட்டணி, 15.1 ஓவரில் தான் தனது முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது. தேவ்தத் படிக்கல் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி 54 ரன்களுக்கு கலீல் அகமதுவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆனால் மறுமுனையில் ஜோஸ் பட்லர், மிரட்டலாக விளையாடி இந்த சீசனில் தனது 3-வது செஞ்சுரியை பதிவுசெய்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். பின்னர் 18.6- வது ஓவரில் 65 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தநிலையில், ஜோஸ்பட்லர், முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சில், டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.

இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்ச ரன்களாக இருந்தது. இதனை அந்த அணியே தற்போது முறியடித்து 222 ரன்கள் எடுத்து தகர்த்தெறிந்துள்ளது. இதேபோல், இந்த சீசனில், மும்பை அணிக்கு எதிராக 68 பந்துகளில் 100 ரன்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 61 பந்துகளில் 103 ரன்களும், இன்று டெல்லி அணிக்கு எதிராக 65 பந்துகளில் 116 ரன்களும் எடுத்து முச்சதம் அடித்து தனி சாதனை படைத்துள்ளார் ஜோஸ் பட்லர். 

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. டெல்லி அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியில் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com