சென்னையை காப்பாற்ற தவறிய ஜோர்டனின் யார்க்கர்கள்! - டெத் ஓவரில் என்னதான் நடந்தது?

சென்னையை காப்பாற்ற தவறிய ஜோர்டனின் யார்க்கர்கள்! - டெத் ஓவரில் என்னதான் நடந்தது?
சென்னையை காப்பாற்ற தவறிய ஜோர்டனின் யார்க்கர்கள்! - டெத் ஓவரில் என்னதான் நடந்தது?

கிட்டத்தட்ட 17 வது ஓவர் வரைக்குமே ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. கடைசி 3 ஓவர்கள் அதுதான் சென்னை அணியின் வெற்றியை பறித்தது. அந்த 3 ஓவரில் என்னதான் நடந்தது?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றிருக்கிறது. மில்லர் மற்றும் ரஷீத்கான் ஆடிய அபாரமான ஆட்டத்தால் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட 17 வது ஓவர் வரைக்குமே ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. கடைசி 3 ஓவர்கள் அதுதான் சென்னை அணியின் வெற்றியை பறித்தது. அந்த 3 ஓவரில் என்னதான் நடந்தது?

170 டார்கெட்டை சேஸ் செய்த போது குஜராத் அணி வேகவேகமாக விக்கெட்டுகளை இழந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு முனையில் டேவிட் மில்லர் மட்டும் விக்கெட் காத்து நிதானமாக நின்று ஆடிக்கொண்டிருந்தார். மில்லர் உறுதியாக நின்றதால் குஜராத் அணி கடைசி வரைக்குமே ஆட்டத்தை உயிர்ப்போடு வைத்திருந்தது. டெத் ஓவர்கள் நெருங்கியது. கடைசி 3 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவை என்ற சூழல் நிலவியது. அதாவது, ஓவருக்கு 16 ரன்கள் என்ற விகிதத்தில் தேவைப்படும் ரன்ரேட் இருந்தது. இந்த தருணம் வரைக்குமே போட்டி சென்னையின் கையில்தான் இருந்தது. 10 நிமிடத்திற்குள் எல்லாமே மாறியது. மாற வைத்தது கிறிஸ் ஜோர்டன் வீசிய அந்த 18 வது ஓவர்.

ஜோர்டன் வீசிய 18 வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் சென்றிருந்தது. 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்து ரஷீத்கான் வெளுவெளுவென வெளுத்துவிட்டிருந்தார். ரஷீத்கான் பேட்டிங் ஆடுவார். சிக்சர்கள் அடிப்பார் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரே ஓவரில் இப்படி போட்டியை மாற்றும் அளவுக்கு ருத்ரதாண்டவம் ஆடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கிறிஸ் ஜோர்டன் அனுபவமிக்க பௌலரே. டெத் ஓவர்களில்தான் அதிகமாக வீசியிருக்கவும் செய்கிறார். ஜோர்டானின் அனுபவத்தை ரஷீத்கான் எப்படி முறியடித்தார்?

ரஷீத்கான், ஜோர்டனின் அனுபவத்தை முறியடித்தார் என்பதை முறியடிப்பதற்கான வழியை ஜோர்டானை அமைத்துக் கொடுத்தார் என்று கூட சொல்லலாம். யார்க்கர்கள்தான் ஜோர்டனின் பலம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம். ஆனால், டெத் ஓவர்களை வீசும்போது யார்க்கர்களை மட்டும்தான் வீசுவேன் என முரண்டு பிடிப்பதும் அது தவறிப்போகும் பட்சத்திலும் வேறு வேரியேஷனை முயன்று பார்க்கமாட்டேன் என விடாப்பிடியாக பிடிவாதம் பிடிப்பது தோல்வியை மட்டுமே பரிசாக அளிக்கும். நேற்று சென்னைக்கு அளிக்கப்பெற்றதை போல!

யார்க்கர் குறித்து தோனி ஒரு முறை பேசும்போது, 'நல்ல வேகத்தில் மிகச்சரியாக துல்லியமாக ஒரு யார்க்கர் வீசப்பட்டால் என்னாலுமே அடிக்க முடியாது. ஆனால், பௌலர்கள் அந்த துல்லியத்தன்மையில் சொதப்பும்பட்சத்தில் அதை சாதகமாக பயன்படுத்தி சிக்சர்களை பறக்கவிடுவேன்' என கூறியிருப்பார். பேட்ஸ்மேன்களின் பார்வையில் யார்க்கருக்கான ஒரு நல்ல வரையறையாக இதை எடுத்துக் கொள்ளலாம். யார்க்கர்கள் என்பது எப்போதுமே இருமுனை கத்தி போன்றதுதான். அது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக துல்லியத்தன்மையோடு வீசப்படுகிறதோ அந்த அளவுக்கு வீரியமிக்கதாக இருக்கும். பேட்ஸ்மேன்களை திணறச்செய்யும். ஆனால், அந்த 100% சரியான யார்க்கரை எல்லா சமயங்களிலும் பௌலர்களால் வீசி விட முடியாது. தவறும்போது அது பேட்ஸ்மேன்களுக்கு மிக எளிதாக பெரிய ஷாட் ஆடக்கூடிய வாய்ப்பை கொடுத்துவிடும். இதுதான் யார்க்கர் வீசுவதில் இருக்கும் ரிஸ்க். இந்த ரிஸ்க்கைத்தான் கிறிஸ் ஜோர்டன் எடுத்திருந்தார்.

ஜோர்டன் வீசிய 18 மற்றும் 20 இரண்டு ஓவர்களிலுமே பெரும்பாலான பந்துகளை யார்க்கராக வீசவே முயன்றிருந்தார். ஆனால், பெரும்பாலும் அது எதுவுமே பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் துல்லியமான யார்க்கராக அமையவில்லை. 18 வது ஓவரில் அவர் வீசிய முதல் பந்தே 140 கி.மீ வேகத்தில் யார்க்கருக்கு முயன்று தவறிப்போய் ஸ்லாட்டில் விழ அதை ரஷீத்கான் லெக் சைடில் திருப்பிவிட்டிருப்பார். லெக் சைட் பவுண்டரியின் தூரம் குறைவு என்பதால் கூடவே ஜோர்டனின் வேகமும் இணைந்து கொள்ள அது க்ளீன் சிக்சராகியிருக்கும்.

லெக் சைடில் அடிவாங்கிவிட்டதால் அடுத்த பந்தை, அளவில் பெரிதான ஆஃப் சைடு பவுண்டரியை மனதில் வைத்து ஒயிட் யார்க்கராக வீச முயன்றார். இதுவும் தவறிப்போய் ஸ்லாட்டிலேயே விழுந்தது. அதையும் ரஷீத்கான் அந்த பெரிய எல்லைக்கோட்டை தாண்டியே சிக்சராக்கினார். யார்க்கருக்கு முயன்ற இரண்டு பந்துகளில் அடி வாங்கிய பிறகும் ஜோர்டன் மாறவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். மூன்றாவது பந்தையும் 143 கி.மீ வேகத்தில் யார்க்கருக்கு முயன்று லோ ஃபுல் டாஸாக்கினார். இதை மிட் ஆஃப் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் ஃபீல்டருக்கு இடையே ரஷீத்கான் பவுண்டரியாக்கினார்.

அடுத்த பந்து, இந்த ஒரே ஒரு பந்தில் மட்டும் கொஞ்சம் லெந்த்தை மாற்றினார். கொஞ்சம் வேகத்தை குறைத்தார். ஆனால், இதுவுமே அந்த ஃபுல் லெந்த் ஏரியாவில் வாட்டமாக விழ அதை ஹெலிகாப்டர் ஷாட்டாக சிக்சராக்கியிருந்தார் ரஷீத்கான். இதுக்கு யார்க்கரே மேல் என, ஐந்தாவது பந்தில் மீண்டும் ஜோர்டன் யார்க்கருக்கு முயன்றார். இந்த முறை 145 கி.மீ வேகத்தில் ஒயிடாக யார்க்கரை இறக்க தயாரானார். ஆனால், இதுவுமே தவறிப்போய் ஃபுல் டாஸாகத்தான் மாறியது. அதிர்ஷ்டவசமாக ரஷீத்கான் லெக் சைடில் சரியாக பேட்டை திருப்பாமல் விட இந்த பந்தில் சிங்கிள் மட்டுமே கிடைத்திருக்கும்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக 18 வது ஓவரின் கடைசி பந்தையும் ஜோர்டன் யார்க்கருக்கே முயன்றார். இந்த முறை ஸ்ட்ரைக்கில் இருந்தது மில்லர். ஆச்சர்யம் என்னவெனில், இந்த பந்தை தோனி கூறியிருந்த அந்த வரையறைக்கு உட்பட்டு 100% துல்லியத்தன்மையுடன் மிடில் ஸ்டம்ப் லைனில் அட்டகாசமான யார்க்கர் ஆக்கியிருந்தார். மில்லர் சிங்கிள் மட்டுமே தட்ட முடிந்தது.

ஆறாவது பந்தில் வந்த இந்த துல்லியமான யார்க்கர் முதல் பந்திலேயே வந்திருந்தால் ரஷீத்கான் அப்படி அனலாக தகித்திருக்கமாட்டார். குஜராத்தின் வெற்றிக்கு ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற சூழலில் 16 ரன்களுக்குள் எவ்வளவு ரன்களை மிச்சப்படுத்திக் கொடுக்கிறோம் என்பதுதான் பௌலர்களுக்கு டார்கெட்டாக இருக்க வேண்டும். ஆனால், இங்கே ஜோர்டன் இந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை கொடுத்திருந்தார். அதாவது, ஒரு ரன்னை கூட மிச்சப்படுத்தி அழுத்தத்தை ஏற்றாமல் 9 ரன்களை கூடுதலாக வழங்கியிருந்தார்.

கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள்தான் தேவை என்ற சூழலில் 19வது ஓவரில் ப்ராவோ, ரஷீத்கானின் விக்கெட்டை வீழ்த்தியதோடு வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து பிரமாதப்படுத்தியிருந்தார்.

இப்போது கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபண்ட் செய்தாக வேண்டும். 18 வது ஓவரில் 25 ரன்களை வழங்கிய ஜோர்டனுக்கே இந்த ஓவர் கொடுக்கப்பட்டது. 18 வது ஓவரில் சொதப்பியதை எண்ணி ஜோர்டன் இந்த ஓவரில் திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அந்த ஓவரில் அந்த கடைசி பந்தில் துல்லியமாக விழுந்த அந்த ஒரு யார்க்கர், ஜோர்டனை மீண்டும் யார்க்கர்களையே நம்ப வைத்தது.

20 வது ஓவர் தொடங்கியது. 137 கி.மீ வேகத்தில் ஜோர்டன் முதல் பந்தை வீசினார். லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட யார்க்கர் அது. மில்லர் பேட்டை விட்டார். ஆனால், சரியாக கனெக்ட் ஆகாமல் பந்து பேடை மட்டுமே உரசி சென்றது. ஜோர்டன் தப்பித்தார். இரண்டாவது பந்து அதுவும் அதே யார்க்கருக்கான முயற்சிதான். இந்த முறை ஸ்லாட்டில் சரியாக பந்து விழுந்தது. மில்லர் லெக் சைடில் மடக்கி அடித்தார். சரியான ஃபீல்ட் இருந்ததால் பவுண்டரில் இல்லை. மில்லரும் ரன் ஓடவில்லை.

மூன்றாவது பந்து. எந்த சர்ப்ரைஸும் இல்லை. படிக்கிற நமக்கே சர்ப்ரைஸ் இல்லாத போது மில்லருக்கு மட்டும் சர்ப்ரைஸாக இருந்திருக்குமா என்ன? இந்த பந்து சிக்சருக்கு பறந்தது. முதல் பந்தில் வீசினாரே அந்த லெக் ஸ்டம்ப் யார்க்கர் அதை மீண்டும் முயற்சித்திருந்தார். இந்த முறையும் தவறிப்போய் நல்ல வாட்டமாக விழுந்திருந்தது.

இனியாவது லெந்தை மாற்றுவார் என நினைத்தால், வாய்ப்பில்லை ராஜா கதைதான். நான்காவது பந்திலும் யார்க்கருக்கான முயற்சி. இந்த பந்தை மில்லர் அடிக்கிறார். ஷார்ட் தேர்டு மேனில் கேட்ச் கொடுக்கிறார். கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. யார்க்கருக்கு முயன்று ஜோர்டன் ஃபுல் டாஸாக வீசிய பந்து மில்லரின் இடுப்புக்கு மேல் சென்று நோ-பால் ஆகியிருந்தது. ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. அங்கேயே போட்டி முடிந்துவிட்டது. அதன்பிறகாவது ஜோர்டன் வேறு எதையாவது முயல்வார் என பார்த்தால், வாழ்ந்தாலும் யார்க்கரால் வீழ்ந்தாலும் யார்க்கரால் என ஜோர்டன் கொள்கை பிடிப்பில் உறுதியாக இருந்தார். ஒரு பந்தை மீதம் வைத்து குஜராத் அற்புதமாக வென்றது.

ஜோர்டன் யார்க்கராக வீச நினைத்ததில் பிரச்சனையில்லை. அது ஜோர்டனின் திட்டமாக மட்டுமில்லை. 18 வது ஓவரில் 25 ரன்களை கொடுத்த பிறகும் கடைசி ஓவரை ஜோர்டனுக்கு கொடுத்தது ஏன்? என ஜடேஜாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ஜோர்டனின் அனுபவத்தை ஒரு காரணமாக கூறிய ஜடேஜா, மேற்கொண்டு அவர்தான் நல்ல யார்க்கர்களையும் வீசுவார் அதனால்தான் கொடுத்தோம் என கூறினார். ஆக, அணியே அவரிடமிருந்து அந்த யார்க்கர்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், அதை அவர் எப்படி வீசினார் என்பதுதான் பிரச்சனை. 18 வது ஓவரில் மில்லருக்கு நறுக்கென மிடில் ஸ்டம்ப் லைனில் ஒரு யார்க்கரை இறக்கியிருந்தாரே? அப்படியான துல்லியமான யார்க்கர்கள் அதிகமாக விழுந்திருக்க வேண்டும். ஆனால், அந்த யார்க்கருக்கு முன்னும் சரி பின்னும் சரி அப்படியான யார்க்கர்கள் விழவே இல்லை. ஜோர்டனின் ஒரே வேகமும் பிரச்சனையாக இருந்தது. 140-145 கி.மீ வேகத்தில் ஒரே மாதிரியாக யார்க்கர் வீசுவதில் என்ன சர்ப்ரைஸ் இருக்கிறது? யார்க்கர் வீசுவதில் உறுதியாக இருந்தாலும் கொஞ்சம் வேகத்திலாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம். இதே ஜோர்டன் வீசிய 14 வது ஓவரில் அவர் யார்க்கரை மட்டுமே நம்பியிருக்கவில்லை. மேலும் வேகத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார். ஒரு பந்தை 105 கி.மீ வேகத்தில் வீசியவர் அடுத்த பந்தை 140 கி.மீ வேகத்தில் வீசினார். இந்த Pace Variation இருந்திருந்தால் கூட ரஷீத்கான் இந்த அடி அடித்திருக்கமாட்டார்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு, தொடர்ந்து வென்று ரசிகர்களுக்கு சென்னை சர்ப்ரைஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்ப்ரைஸே இல்லாத ஒரு பந்துவீச்சால் அது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com