மிரட்டியது இங்கிலாந்து ! சுருண்டது ஆஸ்திரேலியா

மிரட்டியது இங்கிலாந்து ! சுருண்டது ஆஸ்திரேலியா

மிரட்டியது இங்கிலாந்து ! சுருண்டது ஆஸ்திரேலியா
Published on

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்தாயசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் நாட்டிங்ஹம் நகரில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ராய், பையர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே பந்துகளை வீணடிக்காமல் அடித்து விளையாடினர். இதனால், இங்கிலாந்து அணி 7.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. அதன் பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர்.  முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ராய் 61 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 

பின்னர், பையர்ஸ்டோவ் உடன் ஹேல்ஸ் இணைந்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்தனர். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்டனர். இதனால், ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடியை ஆஸ்திரேலிய வீரர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை.

இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 23.5 ஓவர்களில் 200 ரன்களையும், 33.1 ஓவர்களில் 300 ரன்களையும் எட்டியது. ஹேல்ஸ் 62 பந்துகளில் சதம் விளாசினார். 34.1 ஓவர்களில் 310 ரன்கள் எடுத்திருந்த போது பையர்ஸ்டோவ் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். 

பின்னர் வந்த பட்லர் 11 ரன்னில் ஆட்டமிழந்த போதும், மோர்கன் ஹேல்ஸ் உடன் சேர்ந்து அதிரடி காட்டினார். 43 ஓவர்களில் இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டியது. மோர்கன் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். 46 ஓவர்களில் இங்கிலாந்து 450 ரன்கள் குவித்தது. 50 ஓவர்கள் முடிவில் 481 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

இமாலய இலக்கை எட்ட நினைத்து அடுத்து பேட்டிங்கில் இறங்கியது ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சரிவை சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷார்ட் 15 ரன்களில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்தபடியாக அந்த அணியின் ஸ்டாய்னிஸ் மட்டுமே 44 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 37 ஓவர்களில் 239 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.

இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் 4 விக்கெட்டுகளையும், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்வியின் காரணமாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com