பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு மகளிர் அணி வீராங்கனை நடனம் - வைரலான வீடியோ
மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்றப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிப் பெற்று முதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இந்திய அணி டி20 உலகப் போட்டியில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்தை வென்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்தத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி வருகிறார். அதேபோல ஷீகா பாண்டே உள்ளிட்டோர் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இந்திய அணியின் மற்றொரு முக்கியமான இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ். இவரது ஆட்டம் பிரபலமானதோ இல்லையோ, நியூசிலாந்து போட்டிக்கு முன்பு மைதானத்தின் பெண் காவலருடன் இவர் பாலிவுட் பாட்டுக்கு ஆடிய ஆட்டம் வைரலாகி வருகிறது. ஜெமிமாவின் இந்த நடனத்தை ஐசிசி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனை இந்திய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேஸன் கில்லஸ்பி ஆகியோர் ஜெமிமாவின் நடனத்தை பாராட்டியுள்ளனர்.