’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்!
நைட் கிளப்புக்கு சென்றுவிட்டு தாமதமாக அணியில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஒரு வருட தடை விதிக்கப் பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடியது. அங்கு சென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார் இளம் சுழல் பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே. இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்த போது, ஓட்டல் அறையில் இருந்து இரவில் சில வீரர்கள் சுற்றிப்பார்க்கச் சென்றனர்.
அவர்களுடன் ஜெஃப்ரி வாண்டர்சேவும் சென்றார். அனைத்து வீரர்களும் சரியான நேரத்தில் அறைக்குத் திரும்பி விட்டனர். ஆனால், வாண்டர்சேவை மட்டும் அறையில் காணவில்லை. காலையில் அவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் தாமதமாக அறைக்கு வந்து சேர்ந்தார் வாண்டர்சே. இரவில் நைட்கிளப் சென்றதாகவும் ஓட்டலுக்கு திரும்ப வழி தெரியாததால் வருவதற்கு தாமதமாகி விட்டதாகவும் அவர் சொன்னார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார். ஆனால், இதை ஏற்காத இலங்கை கிரிக்கெட் வாரியம், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி, உடனடியாக அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒப்பந்த ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைக்குப் பின், வான்டர்சே, ’உங்கள் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். இலங்கை கிரிக்கெட் வாரியம் என்னை ஓர் ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. என் தாய்நாட்டு அணி பெருமை கொள்ளும்விதமாக இனி நடந்துகொள் வேன்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.