‘முதல் ஆசிய பந்துவீச்சாளர்’ - பும்ராவின் புதிய சாதனை
நான்கு நாடுகளில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். இந்த இன்னிங்ஸில் 8 ஓவர்கள் வீசிய பும்ரா வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் இந்தியா சார்பில் மிகவும் குறைந்த ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆவது முறையாக பும்ரா ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்.
மேலும் ஒரு சாதனையை பும்ரா புரிந்துள்ளார். அதாவது இவர் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை செய்யும் முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.