பும்ராவின் அந்த ’ஆஹா’ கேட்ச்: ஆனாலும் வீணா போச்சே!

பும்ராவின் அந்த ’ஆஹா’ கேட்ச்: ஆனாலும் வீணா போச்சே!
பும்ராவின் அந்த ’ஆஹா’ கேட்ச்: ஆனாலும் வீணா போச்சே!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் 20 ஓவர்‌ கிரிக்கெட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சிக்சர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ரோகித் 9 பந்தில் 21 ரன்களும், ரெய்னா 15 ரன்னிலும், கேப்டன் கோலி 26 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  தவான் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும் ரன் ரேட் சீராக உயர்ந்த நிலையில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 1‌75 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் ஹென்ரிக்ஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

போட்டியின் போது, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் தூக்கி அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே நின்ற பும்ரா அபாரமாகப் பிடித்தார். அந்தரத்தில் துள்ளிப் பந்தைப் பிடித்த பும்ரா, பிறகு பந்தை மைதானத்துக்குள் வீசிவிட்டு பவுண்டரி லைனைத் தாண்டி விழுந்தார். ரசிகர்கள் முதல் வீரர்கள் வரை எல்லோரும் இதைக் கைதட்டிப் பாராட்ட, நடுவர் இரண்டு கையையும் மேலே தூக்கி சிக்சர் என்றார். கடுப்பான கோலி, நடுவரிடம் சென்று கோபமாக முறையிட்டார்.

புதிய விதிமுறைப்படி பந்தை பிடிக்கும் போது வீரர் அந்தரத்தில் கூட எல்லைக்கோட்டை தாண்டியிருந்தால் அது சிக்சராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று விளக்கினார் நடுவர்.

’என்ன விதியோ, போங்க’ என்றபடியே ஏமாற்றத்துடன் சென்றார் விராத் கோலி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com