வரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...!

வரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...!

வரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...!
Published on

களத்தில் நன்நெறியை அதிகம் பின்பற்றியதால் இக்கட்டான சூழ்நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு கிட்டியது. இந்நிலையில் பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஜப்பான் ? 

களைகட்டும் ராஷ்ய உலகக்கோப்பை போட்டியில் ஹெச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த கொலம்பிய அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் போராடி வீழ்த்தியது. ஜப்பான் அணிக்காக 6 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ககவாவும், 73 ஆவது நிமிடத்தில் ஓசாக்கோவும் கோல் அடித்தனர். செனகல் அணிக்கு எதிரான இறுதியாட்டத்தில் இரண்டுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் ஜப்பான் சமன் செய்தது. 34 ஆவது நிமிடத்தில் டகாஷி இனுய்யும், 78 ஆவது நிமிடத்தில் கெய்சுசி ஹோண்டாவும் ஜப்பான் அணிக்காக கோல் அடித்தனர்.

போலந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் வாங்கி ஜப்பான் அணி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஹெச் பிரிவில் ஜப்பான் அணியும், செனகல் அணியும் தலா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தன. இதனையடுத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக விளையாடிதை கணக்கிடும் FAIR PLAY விதிப்படி ஜப்பான் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை எதிர்நோக்கி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது ஜப்பான்.

\

'BLUE SAMURAI' என போற்றப்படும் ஜப்பான் அணி , சர்வதேச தரநிலையில் 61 ஆவது இடத்தில் இருந்தாலும் ஆசியாவின் வலிமை வாய்ந்த அணியாகவே அசத்தியிருக்கிறது. 8 முறை ஆசியக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பெருமையும் ஜப்பான் அணிக்கு உண்டு. தென் அமெரிக்க நாடுகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டியிலும் சிறப்பு அணியாக பங்கேற்ற ஆசிய நாட்டு அணி என்ற பெருமையும் ஜப்பானுக்கு உண்டு. உலகக்கோப்பை போட்டிகளிலும் உற்சாகம் பொங்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது ஜப்பான் அணி. 6 ஆவது முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் ஜப்பான் அணி, மூன்றாவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

2002, 2010 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த இரு முறையும் ஜப்பான் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றை கடக்கவில்லை. இந்த முறை காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைக்கும் வேட்கையுடன் இருக்கிறது. மூன்றாவது முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் அனுபவ நாயகன் கெய்சுகே ஹோண்டா, ஷின்ஜி ககவா, டகாஷி இனுய், யுயா ஓசாகோ, யமாகுச்சி என திறன் படைத்த வீரர்களுடன் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது ஜப்பான் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com