ஜாம்பவான்களை வீழ்த்திய கத்துக்குட்டி... ரஞ்சி சாம்பியனான ஜம்மு&காஷ்மீர்.. தமிழ்நாட்டின் நிலை என்ன?
உலக அளவில் மிகச்சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுவது ரஞ்சிக்கோப்பை தொடர்தான். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது 1934-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடர், 90 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு காலத்தில் மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களோடு மட்டும் சுருங்கியிருந்த கிரிக்கெட் ஆர்வத்தை, இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்ற பெருமை ரஞ்சிக்கோப்பைக்கே உண்டு. சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் முதல் தோனி வரை இந்திய கிரிக்கெட்டின் ஜம்பவான்கள் பலர் இந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் இருந்தே அடையாளம் காணப்பட்டனர். இத்தகைய பெருமைமிக்க கோப்பையை வெல்வது என்பது ஒவ்வொரு மாநில அணிக்கும் கெளரவம் வாய்ந்த ஒன்றாகவும், ஒரு கனவாகும் திகழ்ந்து வருகிறது.
இதுவரை மும்பை, கர்நாடகா, டெல்லி போன்ற பலம்வாய்ந்த அணிகளே ரஞ்சிக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இந்த ஆண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில், 'கத்துக்குட்டி' அணியாகக் கருதப்பட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
1959-60 சீசனில் முதன்முதலாகப் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அணி, கடந்த 67 சீசன்களாக இந்த தொடரை வெல்ல போராடிவந்தது. 2013-இல் முதன்முறையாகக் காலிறுதிக்கு முன்னேறிய அந்த அணி, இந்த ஆண்டு தனது அபார ஆட்டத்தால் அரையிறுதியில் வலுவான மேற்கு வங்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில், ரஞ்சி வரலாற்றின் இரண்டாவது வெற்றிகரமான அணியான கர்நாடகாவை ஜம்மு-காஷ்மீர் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஆடிய கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல் போன்ற சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் நிறைந்த கர்நாடக அணிதான் வெல்லும் எனப் பலரும் கணித்தனர். ஆனால், அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசதியுள்ளது.
ஜம்மு காஷ்மீறில் முறையான பயிற்சி மைதானங்கள்கூட இல்லாத நிலையில், மாநில லீக் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்குப் போதிய நிதி உதவிகூட இல்லாத சூழல்தான் அங்கு நிலவியது. ஏன், இத்தனைக்கும் அந்த அணியில் ஒரு நட்சத்திர வீரர்கூட கிடையாது. இத்தனை சவால்களையும் கடந்து அந்த அணி படைத்துள்ள இந்தச் சாதனை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரின் இந்த எழுச்சி, தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அணி கடைசியாக ரஞ்சிக் கோப்பையை வென்றது 1987-88-ஆம் ஆண்டில்தான். அதற்குப் பிறகு கடந்த 38 ஆண்டுகளாகத் தமிழகத்தால் கோப்பையை முத்தமிட முடியவில்லை.
இந்தியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) உள்ளது. இங்குள்ள லீக் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்கள், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் இருந்தும், ரஞ்சித் தொடரில் தமிழ்நாடு அணி தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது.
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் பலரிருந்தும், சரியான வீரர்களைத் தேர்வு செய்வதில் நடக்கும் குளறுபடிகளே தோல்விக்கு முக்கியக் காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விமர்சனங்களைக் கடந்து, வரும் காலங்களிலாவது தமிழ்நாடு அணி ரஞ்சிக் கோப்பையை வென்று தனது 38 ஆண்டுகால வறட்சியைப் போக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

