INDvsAUS: டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 5 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? ஜடேஜா விளக்கம்!

INDvsAUS: டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 5 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? ஜடேஜா விளக்கம்!
INDvsAUS: டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 5 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? ஜடேஜா விளக்கம்!

“தாம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தினமும் 10-12 மணி நேரம் பந்து வீசியதே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று, 5 விக்கெட்கள் எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது” என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, இன்று நாக்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கிஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் 5 விக்கெட்களை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறுவடை செய்திருந்தார். மற்றொரு வீரரான அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதில் லாபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ரென்ஷா, முர்பி, ஹேண்ட்ஸ்காம்ப் என 5 முக்கிய வீரர்கள் விக்கெட்களை வீழ்த்தியதுடன் அதில் இருவரை டக் முறையிலும் அவுட்டாக்கி இருந்தார். இதுபோல் டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்கள் வீழ்த்துவது 11வது முறையாகும்.

இந்த நிலையில், “நான் தாம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தினமும் 10-12 மணி நேரம் பந்து வீசியதே, என் திறமையை மேம்படுத்தவும், உடற்தகுதியை மீட்டெடுக்கவும் உதவியது” என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் மீண்டும் சிறப்பாகப் பந்துவீசியது மகிழ்ச்சியாக உள்ளது. அதை நல்ல அனுபவமாக அனுபவித்து விளையாடினேன். 5 மாதத்திற்கு பிறகு களம் திரும்பி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. ஆனாலும், அதற்கு நான் தயாராக இருந்தேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் என் திறமை மற்றும் உடற்தகுதியை நிரூபிப்பதற்காகக் கடுமையாக உழைத்தேன். நான் அங்கு, தினமும் 10-12 மணி நேரம் பந்துவீசினேன். அதுதான் எனக்கு இப்போது உதவியது. காயத்தில் இருந்து மீண்டதும்ம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட ஸ்பெல் வீச வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அதனால் அதைச் செய்தேன்.

இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்னதாக, நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சிப்போட்டியில் விளையாடினேன். அதில் கிட்டத்தட்ட 42 ஓவர்கள் வீசினேன். ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடியது தனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அது தனக்கு நிறைய நம்பிக்கை அளித்தது.  நாக்பூர் விக்கெட்டில் பவுன்ஸ் அறவே இல்லை. ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் லைனில்தான் பந்து வீசி இருந்தேன்” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிட்டத்தட்ட 5 மாதம் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா பெயரும் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், அவர் உடற்தகுதியையும் நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் சொல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாத இறுதியில் தமிழ்நாடு - செளராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா, தமிழ்நாடு அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும் அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com