’போல்ட்’ விக்கெட்டில் மைல்கல்.. அனில் கும்ப்ளே, சோயிப் அக்தர் வரிசையில் ஜடேஜா!

’போல்ட்’ விக்கெட்டில் மைல்கல்.. அனில் கும்ப்ளே, சோயிப் அக்தர் வரிசையில் ஜடேஜா!
’போல்ட்’ விக்கெட்டில் மைல்கல்.. அனில் கும்ப்ளே, சோயிப் அக்தர் வரிசையில் ஜடேஜா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்கும் அணிகளைத் தீர்மானிப்பதாக உள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷமி 4 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

7 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா.. சுருண்டது ஆஸி.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. 1 ரன்னுடன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்ஸில் 113 ரன்களுக்குள் அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சுருண்டது. இதில் 7 விக்கெட்களை ஜடேஜா சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்குவகித்தார். அவர் 12.1 ஓவர்களில் 1 மெய்டனுடன் 42 ரன்கள் வழங்கி 7 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களையும் வீழ்த்தி இந்தப் போட்டியில் மட்டும் மொத்தம் 10 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவுற்ற நிலையில், இதுவரை 17 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார். இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த 7 விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.

’போல்டு’ விக்கெட்டில் ஜடேஜா சாதனை!

இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்திய 7 விக்கெட்களில் 5 விக்கெட்களை ’போல்டு’ செய்வதன் (பந்துமூலம் ஸ்டம்பைச் சாய்த்தல்) மூலம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணி வீரரான சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே இதுபோன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செய்து அந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர், கடந்த 1992ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக, ஜோகனஸ்பர்கில், ’போல்டு’ செய்வதன் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

சோயிப் அக்தர், அனில் கும்ப்ளே வரிசையில்.. 

கடந்த 50 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு முன்பாக சாதனை படைத்த ஒரே சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேதான். அப்போது அவர், ஆண்ட்ரூ ஹட்சன், டேவிட் ரிச்சர்ட்சன், பீட்டர் கிர்ஸ்டன், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோன்ஜே ஆகியோரின் விக்கெட்களை போல்டு மூலம் எடுத்திருந்தார். தற்போது, அந்தச் சாதனையை ஜடேஜா செய்திருக்கிறார். அவர் பந்துவீச்சில், லபுஸ்சேன், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, கேப்டன் கம்மின்ஸ், நாதன் லயன், மேத்யூ குக்னிமேன் ஆகியோர் போல்டாகினர். இவர்கள் இருவரும் சுழல்பந்து வீச்சாளர்களாய் இந்த சாதனையை செய்த நிலையில், வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தரும் இதுபோன்று சாதனை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கிளீன் போல்டு மூலம் அவுட்டாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மேலும் ஒரு சாதனையையும் ஜடேஜா செய்திருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா, தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்து உள்ளார். அதில் 48 ரன்கள் வழங்கி 7 விக்கெட்டுகளை எடுத்த ஜடேஜா, இந்தப் போட்டியில் 42 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார். இதையடுத்து அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மிகச் சிறப்பான பந்துவீச்சாக இது அமைந்துள்ளது. இதுவரை 62 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கும் ஜடேஜா, 12 முறை 5க்கும் மேற்பட்ட விக்கெட்களைக் கைப்பற்றி இருக்கிறார்.

வெற்றிக்கு பின் ஜடேஜா!

இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜா, ”இந்த மைதானம், எனது பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. பேட்டர்கல் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார்கள் என்று தெரியும். ஆகையால் பந்துகளை நேராக வீச வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். வேறு திட்டமே என்னிடம் இல்லை. அதேபோல் அவர்கள் நிறைய ரன்கள் அடிக்கும் முனைப்பில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஸ்டம்பை குறிவைத்து மட்டுமே வீசினேன். அதன்படியே இன்று நடந்துவிட்டது. இந்த பிட்சில் ஸ்வீப் அடிப்பது மோசமான முடிவைத் தரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com