அரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.!

அரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.!

அரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.!
Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா அசத்தியுள்ளார். 

நடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா சற்று நிலைத்து ஆடினர். இவர்கள் இருவரும் 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து 31 ஓவர்களில் இந்திய அணி 94 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வெற்றிப் பெற தோனி மற்றும் ஜடேஜா நின்று ஆடவேண்டிய கட்டாயம் எழுந்தது. 

அதற்கு ஏற்ற மாதிரி ரவிந்திர ஜடேஜா தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடினாலும் அதன்பின்னர் சுதாரித்து சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார். ஆட்டத்தின் 41ஆவது ஓவரில் ஜடேஜா 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அதன்பிறகும் தனது சிறப்பான ஆட்டத்தை ஜடேஜா தொடர்ந்தார். 

இதன்மூலம் இந்திய அணி 45 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இறுதியில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்ட ஜடேஜா 47ஆவது ஓவரில் 59 பந்துகளில் தலா 4 சிக்சர் மற்றும் பவுண்டரிகள் விளாசி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இந்தியா சார்பில் 8ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சின் போது ஜடேஜா 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் சாய்த்தார். அத்துடன் ஃபீல்டிங்கிலும் அசத்திய ஜடேஜா மூன்று கேட்சுகள் பிடித்தார். மேலும் ஒரு ரன் அவுட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். மேலும் நடப்பு உலகக் கோப்பையில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஃபீல்டிங்கில் 41 ரன்களை தடுத்து அதிக ரன்கள் தடுத்தவர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடமும் பிடித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com