”கேஎல்.ராகுல் நிலையில் நானும் இருந்தேன்; பாத்ரூமில் அழுதிருக்கிறேன்” - தினேஷ் கார்த்திக்

”கேஎல்.ராகுல் நிலையில் நானும் இருந்தேன்; பாத்ரூமில் அழுதிருக்கிறேன்” - தினேஷ் கார்த்திக்
”கேஎல்.ராகுல் நிலையில் நானும் இருந்தேன்; பாத்ரூமில் அழுதிருக்கிறேன்” - தினேஷ் கார்த்திக்

மோசமான பேட்டிங் காரணமாக கடுமையான விமர்சனங்களை கே.எல்.ராகுல் சந்தித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும் தன்னுடைய மோசமான காலகட்டம் குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால், பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுலிற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் ஒரு திறமையான வீரர் என்றும், அவருக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்றும், தற்போது அவருக்கு சிறிது இடைவெளி தேவை என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் தானும் இதுபோன்ற நிலைகளை கடந்து வந்துள்ளதாகவும், அந்த நிலை எப்படி வலிமிகுந்ததாக இருந்தது என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மோசமான கட்டத்தை சந்தித்து வருகிறார் கேஎல் ராகுல்!

கே.எல்.ராகுல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், மிக மோசமான ஒரு கட்டத்தை சந்தித்து வருகிறார். காயம் மற்றும் அறுவை சிகிச்சையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ராகுல், கடந்த ஆண்டில் பல போட்டிகளில் காயத்தின் காரணமாக விளையாடாமல் தவிர்த்திருந்தார். மேலும் மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட் தரப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். டி20 களில் சரியாக விளையாடாத காரணத்தினால், துணை கேப்டன் பதவியை இழந்த அவர், டி20 அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டும் அவருக்கு மோசமான ஒன்றாகவே மாறியுள்ளது. கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17 மற்றும் 1 ரன்கள் என மொத்தமாக 125 ரன்களை மட்டுமே எடுத்ததால், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. மேலும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில், ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இல்லாமல் போவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் அடுத்த போட்டியில் கைவிடப்பட்டால், அது ஒரு இன்னிங்ஸால் வந்தது அல்ல!- தினேஷ் கார்த்திக்

இந்நிலையில், கே.எல்.ராகுலின் மோசமான காலகட்டம் குறித்து வருத்தப்பட்டு பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், “அடுத்தப் போட்டியில் அணியில் எடுக்கப்படாமல் ராகுல் அமரவைக்கப்படுகிறார் என்றால், அது ஒரு இன்னிங்ஸால் ஏற்பட்டது அல்ல. கடந்த ஐந்தாறு டெஸ்ட் போட்டிகளில் என்ன நடந்தது என்பதும், எதற்காக தான் அமர வைக்கப்படுகிறோம் என்பதும் நிச்சயம் அவருக்கு புரியும். அவர் ஒரு கிளாஸ் பிளேயர், கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மேட்களிலும் மிகவும் திறமையாக விளையாடக்கூடியவர். இந்த கடினமான நேரத்தில், அவருடைய டெக்னிக் தான் பிரச்னை என்று நான் நினைக்கவில்லை. இது வெளியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், காதுகளுக்கும் இடையே நடப்பது தான். அவருக்கு நிச்சயம் விளையாட்டில் இருந்து சிறிது இடைவெளி தேவைப்படலாம் என்று நான் நினைக்கிறேன். ஒருநாள் தொடருக்கு புதிதாக திரும்பி வாருங்கள்" என்று கிரிக்பஸ்-க்கு அளித்த பேட்டியில் கார்த்திக் கூறியுள்ளார்.

இது ஒரு மோசமான தருணம்! இதே நிலையில் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்!

போட்டி உலகத்தில் இது போன்ற மோசமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வெளியில் வரவேண்டும் என்று கூறிய அவர், “இது ஒரு தொழில்முறை உலகம். இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடும்போது, அதை நீங்கள் சமாளித்து வெளியில் வர வேண்டும். ஆனால், ஒரு வீரராக நான் எப்படி இந்த தருணத்தில் உணர்ந்தேன் என்றால், அது மோசமான ஒன்றாக இருந்தது. எல்லாம் உங்கள் கையை மீறி செல்லும், உங்களால் எதுவும் செய்யமுடியாமல் போகும். இப்படியான ஒரு வழியில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், இதுதான் உங்களுடைய கடைசி இன்னிங்ஸ் என்று உங்களுக்குள் தோன்றும். நான் டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்றபோது, அமைதியாக கழிப்பறைக்குள் நுழைந்து ஓரிரு கண்ணீர் சிந்தினேன். உங்களால் வேறு எதுவும் செய்யமுடியாததால், அது ஒரு மோசமான உணர்வாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

நான் ராகுலுக்கு மாற்றாக கில்-இடம் செல்வேன்! ஆனால் இது தற்காலிகம் தான் அவர் மீண்டும் வருவார்!

ராகுலிற்கு மாற்றுவீரர் பற்றி பேசுகையில், “கே.எல்.ராகுலிற்கு மாற்று வீரராக, நான் சுப்மன் கில் இடம் செல்வேன். கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் தான் நான் செய்வேன். ஆனால், இது தற்காலிகமான முடிவு தான், ராகுலுக்கு மாற்று வீரர் என எந்த ஒரு வலது கை பேட்டரும் இந்திய அணியில் இல்லை. அந்தளவு சிறந்த ஷாட்களை அவர் வைத்திருக்கிறார். மீண்டும் அவர் ஸ்டிராங்காக திரும்ப வருவார்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com