யூரோ கோப்பை கால்பந்து: துருக்கியை வீழ்த்திய இத்தாலி
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் துருக்கி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி பெற்றது.
காலபந்து ரசிகர்களால் உலகக் கோப்பை தொடருக்கு நிகராக திருவிழா போல் கொண்டாப்படும் யூரோ கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்தாண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட இத்தொடர் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சர்வதேச அரங்கில் பலமான அணியாகப் பார்க்கப்படும் இத்தாலிக்கு, ஆட்டத்தின் முதல் பாதியில் துருக்கி அணி வீரர்கள் சரிசமமாக ஈடுகொடுத்தனர். முதல் பாதியான 45 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஜாம்பவான் அணி என்பதை நிரூபிக்கும் விதமாக இரண்டாம் பாதியை அதிரடியுடன் தொடங்கியது இத்தாலி. அதன்பலனாக துருக்கி வீரரின் பதற்றத்தால் இத்தாலி அணிக்கு ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் OWN GOAL கிட்டியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணிக்கு, சிரோ இம்மொபைல் 66 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை வசமாக்கினார். இதனைத் தொடர்ந்து 79 ஆவது நிமிடத்தில் லொரென்ஸோ இன்சிக்னே 3-ஆவது கோலை இத்தாலி அணிக்கு வசமாக்கினார். பின்னர் துருக்கி அணி கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் இத்தாலி வீரர்கள் திறம்பட முறியடித்தனர். இதன் மூலம் இத்தாலி அணி 3- 0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.