ஐபிஎல் ஏலத்தில் குஜராத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை 11 கோடியை 50 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
உனட்கட்டை ஏலத்தில் எடுக்க, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பெரிதும் ஆர்வம் காட்டின. இவ்விரு அணிகளின் ஏலத்தொகையை கடந்து 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. நடப்பு சீசனில் பென் ஸ்டோக்ஸ்க்கு அடுத்தபடியாக அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ஜெய்தேவ் உனட்கட் உள்ளார். அதிகத் தொகைக்கு ஏலத்தில் விலைபோன இந்திய வீரரும் இவர்தான்.
இதுபற்றி உனட்கட் கூறும்போது, ’கடந்த ஆண்டு நான் சிறப்பாக செயல்பட்டேன். அதனால் நல்ல விலைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் இவ்வளவு தொகைக்கு போவேன் என்று நினைக்கவில்லை. சென்னை, பஞ்சாப் அணிகள் என்னை எடுக்க போட்டிப்போட்டது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணிதான் என்னை எடுக்கும் என்று நினைத்தேன். திடீரென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னை எடுத்துக்கொண்டது. இது சினிமாவில் வரும் திருப்பத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது’ என்றார்.
இவர், கடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணிக்காக, தோனியுடன் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.