தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், இந்த வாரம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மோர்னே மோர்கல் கூறும்போது, ‘ஓய்வு பெறுவது என்பது கடினமான முடிவுதான். புதிய அத்தியாயம் தொடங்க இதுதான் சரியான தருணம். இது எனது குடும்பத்தின் முடிவு. எனக்கு இளம் குடும்பம் உள்ளது. மனைவி ரோஸ் கெல்லி வெளிநாட்டை (ஆஸ்திரேலியா) சேர்ந்தவர். தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடப்பதால் குடும்பத்தை பிரிந்து செல்ல நேரிடுகிறது. இது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குடும்பத்தை மனதில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளேன். தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். ஆனால், குடும்பம் என்று வரும்போது அதற்குத்தான் முக்கியத்துவம். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வேண்டும்.
அதில்தான் எனது முழு கவனமும் உள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் மற்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.
33 வயதான மோர்கல் 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளையும் 117 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.