சிக்ஸரில் அரை சதத்திற்கு போட்டி போடும் தோனி மற்றும் கோலி : கெயிலை பின் தள்ளுவாரா ரோகித்?
இன்று நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ரோகித், தோனி, கோலி ஆகியோர் சிக்ஸரில் சாதனைப் படைப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்திலுள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் நிதானமாக விளையாடி கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதனிடையே ரோகித் சர்மா, தோனி, கோலி ஆகியோர் அதிக சிக்ஸர் அடிக்கும் சாதனை பட்டியல் வரிசையில் உள்ளனர்.
மிகக் குறைந்த ஆட்டங்களில் அதிகபட்சமான சிக்ஸர்களை அடித்திருக்கும் பட்டியலில் 102 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். 103 சிக்ஸர்களுடன் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிரிஸ் கெயில் முதலிடத்திலும் அதே 103 சிக்ஸர்களுடன் நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் குப்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு உள்ளது. அதேபோல், இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மாவை தொடர்ந்து யுவராஜ் சிங்(74), சுரேஷ் ரெய்னா(56), தோனி (49), கோலி (48) ஆகியோர் சிக்ஸர் பட்டியல் வரிசையில் உள்ளனர்.
இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் தோனியும் இரண்டு சிக்ஸர் அடித்தால் கோலியும் அரைசதத்தை தொட்டு விடுவர். கடந்த டி20 ஆட்டத்தில் ரோகித்தும் கோலியும் வாய்ப்பை நழுவ விட்டனர். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஆனால் தோனி ஒரு சிக்ஸர் அடித்தார்.
இந்நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இதில், ரோகித், தோனி, கோலி ஆகியோர் வாய்ப்பை பயன்படுத்தி சாதனை படைப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

