“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு
தற்போது இந்திய அணியில் விளையாடுவது தோனி இல்லை என்றும், பழிவாங்கும் பழைய தோனி என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் அலென் பார்டர் வியப்படைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதில் மூன்று போட்டிகளிலுமே அரை சதம் அடித்த முன்னாள் கேப்டன் தோனிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடர்பாக பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் அலென் பார்டர், “ஒருநாள் தொடர் சவாலாக முடிந்தது. இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. தோனி அவராக இல்லை. பழிவாங்கும் பழைய தோனியாக மாறியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் சீரான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடரை இந்தியா வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் தான். இந்தியா ஒரு சிறப்பான அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில சிறந்த வீரர்கள் எங்கள் அணியில் ஒரு வருடமாக இல்லை. அதேசமயம் இந்தியா தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்த வெற்றி சாத்தியமாகிவிட்டது. இந்திய அணி டி20 போட்டியில் கடும் சவாலாக இருக்கும் என கணித்திருந்தோம். ஏனென்றால் ஐபிஎல் விளையாடிய அனுபவத்தை இந்திய வீரர்கள் பெற்றிருந்தனர்.
கணித்தது போலவே இந்தியா டி20ல் சிறப்பாக விளையாடியது. அதேபோன்று டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. எனவே டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது எதிர்பார்க்காத ஒன்றல்ல. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த வெற்றியை பெற்றது தான் ஆச்சர்யம். ஏனென்றால் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சில் பலத்துடனும், இந்தியா சுழற்பந்து வீச்சுடனும் எப்போதும் களத்தில் மோதுவார்கள். இப்போது அது தலைகீழாக நடந்துள்ளது” என்றார்.