ஐ.எஸ்.எல் சீசன் 2020-21: சென்னை எஃப்.சி அணியில் இணைகிறார் எனெஸ் சிபோவிச்!

ஐ.எஸ்.எல் சீசன் 2020-21: சென்னை எஃப்.சி அணியில் இணைகிறார் எனெஸ் சிபோவிச்!
ஐ.எஸ்.எல் சீசன் 2020-21: சென்னை எஃப்.சி அணியில் இணைகிறார் எனெஸ் சிபோவிச்!

2020-21 ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எஃப்.சி அணியில், போஸ்னியாவைச் சேர்ந்த எனெஸ் சிபோவிச் இணைந்திருக்கிறார்.

6'6" உயரம் கொண்ட மத்திய கள ஆட்டவீரரான சிபோவிச், ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் கத்தாரின் முன்னணி கிளப்பான உம் சலால் எஸ்.சி அணியில் விளையாடி வந்தார். இந்த புதிய சீசனில், ரீகன் சிங், சுவாந்தே ஃபனாய் ஆகியோருக்குப் பிறகு சென்னையின் எஃப்.சி-யில் இணையும் மூன்றாவது வெளிநாட்டு வீரர் சிபோவிச்.

ஐ.எஸ்.எல் தொடரில் விளையாடப்போகும் முதல் போஸ்னிய வீரரான சிபோவிச்சுக்கு கடந்த வாரம்தான் 30 வயது நிறைவடைந்தது. இந்தியாவில் விளையாடுவதற்கும், சென்னையின் எஃப்.சி தலைமைப் பயிற்சியாளர் சபா லாஸ்லோவோடு இணைந்து பணியாற்றவும் ஆவலோடு இருக்கிறார் அவர். இதுபற்றி, "இந்தியாவில்தான் அடுத்து விளையாடுவேன் என்று எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. இதுபோன்ற ஓர் அற்புதமான கிளப்பில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டு மார்கோ மடரசியின் தலைமையில் தொடங்கிய முதல் சீசனிலிருந்து சென்னையின் எஃப்.சி-யை பின்தொடர்கிறேன். மிகவும் வெற்றிகரமான இந்த அணிக்கு ஈடு இணையற்ற ரசிகர் கூட்டம் இருப்பதை நான் அறிவேன். அடுத்த சீசனுக்காக இப்போதே ஆவலோடுக் காத்திருக்கிறேன். இது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

பயிற்சியாளர் சபா லாஸ்லோ கூறுகையில், ‘’சென்னையின் எஃப்.சி அணியிலும் ஐ.எஸ்.எல் தொடரிலும் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கொண்டிருக்கிறார் சிபோவிச். அவரது உயரம் அவருக்கு கூடுதல் சிறப்பு. அதோடு அவர் பந்தை கட்டுக்குள் வைத்து கையாளுவதில் கைதேர்ந்தவர். எலி சாபியாவுடன் இணைந்து மிகச்சிறந்த எதிரணிக் கூட்டணியை அமைப்பார் என்று நம்புகிறோம். அதோடு, இளம் இந்திய வீரர்களை வழிநடத்த அவர் மிகச்சரியான ஒருவர். ஆசியாவின் கடினமான தட்பவெட்ப சூழ்நிலைகளைக் கொண்ட கத்தார், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் விளையாடியுள்ள அவர், நிச்சயம் இந்தியாவிலும் சிறப்பாகச் செயல்படுவார்" என்கிறார்.

போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா அண்டர் 21 அணியின் முன்னாள் வீரர் சிபோவிச். பிரபல வீரர் ஈடன் ஜெகோவை உருவாக்கிய சரயேவோவின் எஃப்.கே செலியஸ்னிகார் அகாடெமியில் பயிற்சி பெற்றவர். 2010-11 சீசனில் ரொமானியாவின் மேல்பிரிவில் வென்ற ஒதேலுல் கலாதி அணியில் ஆறு ஆண்டுகள் விளையாடினார். ரோமன் லிகா 1 தொடரில், சென்னையின் அணியின் முன்னாள் கேப்டன் லூசியன் கோயனை எதிர்த்து விளையாடியிருக்கிறார் சிபோவிச்.

அதன் பிறகு, பெல்ஜியம் (கே.வி.சி.வெஸ்டீரியோ), மொராக்கோ (இட்டிஹாட் டாஞ்சர், ஆர்.எஸ்.பெர்கேன்) போன்ற நாடுகளில் ஆடிவிட்டு ஆசியாவிற்கு வந்தார். சவூதி அரேபியாவின் ஒஹோ கிளப்பில் இணைந்தவர், பின்னர் தன் பழைய அணியான எஃப்.கே செலியஸ்னிகாரில் இணைந்தார். கடந்த சீசனில், கத்தாரின் உம் சலால் அணியில் இணைந்து ஆடினார். தற்போது அவர் போஸ்னிய தலைநகர் சரயேவோவில் உள்ள தன் சொந்த ஊரில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com