ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப் போட்டி: ரூ.8 கோடியை வெல்லப் போவது யார்?
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.
ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி குறுக்கிட்டதால் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில், லீக் ஆட்டம் முடிந்து, பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி, மும்பையில் இன்று இரவு நடக்கிறது.
கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி, தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதே போல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி, 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
பெங்களூரு அணி 3 முறையும், கோவா ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடி வழங்கப்படும்.